
சென்னையில் போதை மாத்திரை வாங்குவதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 9 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் ராகேஷ் என்ற ஐ.டி. நிறுவன ஊழியரை தாக்கிய 6 பேர் கும்பல் அவரது செல்போனை பறித்துச் சென்றது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இதே கும்பல் தி.நகரிலும் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அவர்களே டிக்டாக் வீடியோ வெளியிட்டு சிக்கிக் கொண்டுள்ளனர். அதன் மூலம் செல்போன் பறிப்புக் கொள்ளையர்களை அடையாளம் கண்ட காவல்துறை அவர்களை கைது செய்தது.
பிடிபட்ட 9 பேரும் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர்கள். 16 மற்றும் 17 வயது சிறுவர்களான இவர்கள், போதை மாத்திரைக்கு அடிமையானதால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். குழுவாகப் பிரியும் 9 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகரில் இருந்து செங்குன்றம் வரை செல்லும் இவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபடுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். செல்போனை பறித்து கடைகளில் விற்கும் சிறுவர்கள் பெரும்பாலும் பணத்துக்கு பதில் போதை மாத்திரைகளையே பெற்றதாக சொல்லப்படுகிறது.
சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்தது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.