சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 6 பேர் கைது

சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 6 பேர் கைது
சென்னை: போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 6 பேர் கைது

போலியான ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தினை அபகரித்தும், வங்கியில் கடன் பெற்றும் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கம் ஜக்கிரியா காலனி 4-வதுதெருவில் வசிக்கும் விஜயாமுரளி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தன் தந்தையின் சொத்தான 2160 சதுரடி மனையை வாரிசுரிமை உயில்படியும், உயர்நீதிமன்ற ஆணையின் படியும் அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு விஜயா முரளியின் தாத்தா பாலசுப்பிரமணியம் என்பவரின் போலி மகளாக ராஜேஸ்வரி என்பவரை சித்தரித்து அவர், தன் சகோதரி ராதாவிற்கு செட்டில்மெண்ட் செய்ததாக போலி ஆவணங்களை அடையாளம் தெரியாத நபர்கள் ஏற்பாடு செய்து, அதை பதிவு செய்து இடத்தை அபகரிக்கவும், இடத்தின் மீது வில்லங்கத்தை ஏற்படுத்தியும் உள்ளனர் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜயா முரளி புகார் கொடுத்தார்.

இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் அனந்தராமன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விஜயாமுரளி இடத்தில் அவரின் தாத்தா பாலசுப்பிரமணியம் மகள் எனக் கூறப்பட்ட ராஜேஸ்வரி தன் சகோதரி ராதாவிற்கு செட்டில்மெண்ட் செய்தது போலவும், பின்னர் ராதா 2021 ஆம் வருடம் தன் கணவர் பிரபுக்கு செட்டில்மெண்ட் செய்தது போலவும், பின்னர் பிரபு தன் அதிகார முகவர் குமார் மூலமாக சமீர் கோட்டக்கல் உமர் என்பவருக்கு ரூ.2 கோடி ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சமீர் கோட்டக்கல் உமர் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2 கோடி கடன் பெற்று சொத்தை வாங்கியதாகவும், இந்த கடனை பெற விஜயாமுரளி என்பவரின் சொத்தில் போலி ஆவணங்கள் மற்றும் வில்லங்கம் ஏற்படுத்தி வங்கி மூலம் கடன் பெற்று வங்கியையும் ஏமாற்றியுள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சமீர், கோட்டக்கல் உமர், நவ்சத், செம்மஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு, மணலியைச் சேர்ந்த சிந்து பரமசிவம், மணலி மாத்தூரைச் சேர்ந்த யாசின் செரிப், மல்லிகா ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com