சென்னை | கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயது மதிப்புடைய பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை அந்தப் பெண் படுத்திருந்தபோது, அங்கு குடிபோதையில் இருந்த ஒருவர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அந்த பெண் கூச்சலிட்டதால் அருகில் இருந்த நபர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேஎம்சி மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை பிடித்து கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார், சதீஷ்குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் சீண்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.