
சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் இப்ராகிம் ஷா. இவரது வீட்டிற்குள் கடந்த 1993 ஆம் ஆண்டு புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி முனையில் தாக்கி பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர். இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட முத்து, மகேந்திரன், உள்ளிட்டோரை போரூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் 30 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த சக்திவேல் என்பவர் பெரும்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கல்யாண்குமார், தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்றிரவு சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சக்திவேல் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 'லிப்ட்' ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.