ஸ்கெட்ச் போட்டு ஐடி பெண்களின் லேப்டாப்பை திருடும் கும்பல்: பொறிவைத்து பிடித்த போலீஸ்...

ஸ்கெட்ச் போட்டு ஐடி பெண்களின் லேப்டாப்பை திருடும் கும்பல்: பொறிவைத்து பிடித்த போலீஸ்...
ஸ்கெட்ச் போட்டு ஐடி பெண்களின் லேப்டாப்பை திருடும் கும்பல்: பொறிவைத்து பிடித்த போலீஸ்...

சென்னையில் ஐடி பெண் ஊழியர்களின் லேப்டாப்களை திருடி வந்த 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஓஎம்ஆர் (பழைய மகாபலிபுரம் சாலை) சாலையில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் ஊழியர்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் லேப்டாப்கள் கொள்ளை கும்பலால் பறிக்கப்படுகின்றன. 

குறிப்பாக கொள்ளைக் கும்பல் அதிகமாக ஸ்கெட்ச் போடுவது தனிமையில் செல்லும் பெண்களுக்குதான். இந்தக் கும்பல் லேப்டாப்பை மட்டும் திருடுவதில்லை, பெண்கள் தனிமையில் சிக்கினால் நகை, பணம் மற்றும் செல்போன்களையும் பறித்து செல்கிறது. கையில் கத்தியை வைத்துக்கொண்டு, ‘உன்னிடம் இருப்பதை எடு’ என இந்தக் கொள்ளையர்கள் முரட்டுக்குரலில் மிரட்டு, யாருமே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பயத்தில் இருப்பதையெல்லாம் கொடுத்துவிடுவார்கள். 

அவ்வாறு நடந்த ஒரு சம்பவம்தான், சென்னை பெரும்பாக்கத்தில் பெண் ஐ.டி ஊழியரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது. தாக்குதலுக்கு உள்ளான பெண் லாவண்யா, ஆந்திராவைச் சேர்ந்தவர். சென்னை நாவலூரை அடுத்த தாழம்பூரில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள், அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். நிலைக்குலைந்த அவரை மிரட்டி 15 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய், விலை உயர்ந்த கைப்பேசியையும் திருடிச் சென்றனர். படுகாயங்களுடன் மயக்கமடைந்த அந்தப் பெண், அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் உயரதி‌காரிகள் தலைமையி‌ல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர் லாவண்யாவின் வாக்குமூலத்தின் மூலம் 3 பேரை கைது செய்தனர். இருப்பினும் ஐடி ஊழியர்களிடம் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில் கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறத்தொடங்கின. அந்தப் பகுதியிலும் பெரும்பாலும் ஐடி ஊழியர்கள் தான் குடியிருக்கின்றனர். அவர்கள் வேலைக்குப் போன நேரம் பார்த்து வீட்டில் இருக்கும் லேப்டாப்கள் மற்றும் போன் போன்ற பொருட்கள் கொள்ளையடிப்பட்டன.

இதையடுத்து ஐடி ஊழியர்களை குறிவைத்து லேப்டாப் திருடும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதற்காக கொள்ளை போன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யபட்டது. அதில் கிடைத்த நபர்களின் உருவத்தின் அடிப்படையிலும், செல்போன் சிக்னலின் அடிப்படையிலும் கொள்ளையர்கள் தேடும் வேட்டை நடைபெற்றது. இந்தத் தேடுதல் வேட்டையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (எ) கெளதம்(24), மணிகண்டன் (26) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லேப்டாப்பை திருடிய பணத்தில் இருசக்கர வாகனங்கள் வாங்கி உல்லாசமாக ஊர் சுற்றியதாகவும், செலவழித்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்த 2 லேப்டாப், 2 இருசக்கரவாகனம், 4 சவரன் தங்க நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் கெளதம் மீது 2015ம் ஆண்டு லேப்டாப் திருடிய வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கண்ணகி நகர் போலீசார், இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

(தகவல்கள்: சாந்த குமார், புதிய தலைமுறை செய்தியாளர், தாம்பரம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com