சென்னை: வாகன சோதனையில் சிக்கிய போதை மாத்திரைகள் - இளைஞர் கைது
இருசக்கர வாகனத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை கடத்தி வந்த நபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 500 போதை மாத்திரைகள், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாட்டை குறைக்க காவல் துறையினர் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரவாயல் காவல்துறையினர் சார்பில் மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுரவாயல் மேட்டுக்குப்பம் பிரதான சாலை வழியாக வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 500 போதை மாத்திரைகளும் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் (22) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்த மாத்திரை மற்றும் கஞ்சா ஆகியவைகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.