சென்னை பெரம்பூரில் பெண் வேடத்தில் வந்து, பெண் மருத்துவரை சரமாரியாக வெட்டிய நபர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் கருத்தரிப்பு மையம் நடத்திவருபவர் மருத்துவர் ரம்யா. இவர் வழக்கம்போல பணி முடிந்து பெரம்பூர் படேல் சாலையில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்புக்குத் திரும்பினார். காரைவிட்டு இறங்கி வீட்டுக்குச் செல்ல முயன்ற ரம்யாவை, அங்கு மறைந்திருந்த பர்தா அணிந்த நபர் திடீரென பாய்ந்து அரிவாளால் வெட்டினார். ரம்யாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தபோது, பர்தா அணிந்த நபர் பைக்கில் தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த ரம்யா, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரம்யாவின் கணவரும் மருத்துவராக இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைக்கொண்டு செம்பியம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பாக தாமஸ் என்ற மருத்துவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் தாமஸிடம் ரம்யா ஏற்கனவே வேலை பார்த்து வந்தார். தற்போது ரம்யா கோயம்பேட்டில் தனியாக மருத்துவமனையை தொடங்கி நடத்திவருகிறார். இதன் காரணமாக எழுந்த தொழிற்போட்டியால் மருத்துவர் தாமஸ் ஆட்களை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் ரம்யா சிறந்த கருவுறு மையத்திற்கான விருது மற்றும் சிறந்த மருத்துவருக்கான விருதுகளை பெற்றவர் ஆவார்.