பைக் திருடர்களை 43 கி.மீ பின் தொடர்ந்து சென்று பொறி வைத்து பிடித்த போலீஸ்

பைக் திருடர்களை 43 கி.மீ பின் தொடர்ந்து சென்று பொறி வைத்து பிடித்த போலீஸ்

பைக் திருடர்களை 43 கி.மீ பின் தொடர்ந்து சென்று பொறி வைத்து பிடித்த போலீஸ்
Published on

சென்னையில் விலை உயர்ந்த பைக்குகளை திருடி போலி ஆவணங்கள் மூலம் இணைய தளங்களில் விற்று வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை கோட்டூர்புரத்தில் தொடர்ந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. இதுதொடர்பான புகார்கள் காவல்நிலையங்களுக்கு வந்த வண்ணம் இருந்தது. இதனால் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.


 
இருசக்கர வாகனங்கள் திருடுபோன பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடிய ஒருவர், கேளம்பாக்கம் வரை  ஓட்டிச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக கோட்டூர்புரத்தில் இருந்து கேளம்பாக்கம் வரை 43 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 150 சிசிடிவி காட்சிகளை தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து கேளம்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து கண்காணித்தனர். இதில், கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக 6 வாலிபர்கள் தங்கி இருந்ததும், புதிது புதிதாக இருசக்கர வாகனங்களை அவர்கள் எடுத்து வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து அந்த வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்ட தனிப்படை காவல்துறையினர், அதிலிருந்த 4 பேரை கைது செய்தனர்.  விசாரணையில் அவர்கள் கேளம்பாக்கம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்தர், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ், தையூரை சேர்ந்த விஜயன் மற்றும் பிரபாகர் எனத் தெரியவந்தது. 

இங்கிருந்து தப்பி ஓடிய 3 பேர் தலைமறைவாகி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான இருசக்கர வாகனங்களின் அசல் ஆவணங்களை விலைக்கு வாங்கியுள்ளனர். அந்த ஆவணங்களில் உள்ள பதிவு எண்கள், இன்ஜின் நம்பர் மற்றும் சர்வீஸ் நம்பர் ஆகியவற்றை திருடிய வாகனங்களுக்கு மாற்றி புதிய பைக் போல் காட்டி இணையதளம் மூலம் பலரிடமும் விற்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

கைதான ரமேஷ்தான் இந்த பைக் திருடும் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். ஏற்கனவே அவர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தவர். சென்னை முழுவதும் ரமேஷ் மீது 32 வழக்குகள் உள்ளன. 
இந்தக் கும்பல் வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் சென்னை நகருக்குள் வந்து விலை உயர்ந்த பைக்குகளை திருடி விட்டு, கேளம்பாக்கத்திற்கு கொண்டு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக விலை உயர்ந்த வாகனங்களான பல்சர், புல்லட் உள்ளிட்ட வாகனங்களை அதிக அளவில் திருடியுள்ளனர். இணையதளம் தவிர, சில அரசியல் பிரமுகர்களிடமும் வாகனங்களை விற்றுள்ளனர். கைதான 4 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 15 இருச்சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பழைய பைக்குகள் தொடர்பான விவரங்களை திருட்டு கும்பலுக்கு கொடுப்பது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோன்று கடந்த மாதம் சென்னை வேப்பேரியில் 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலி ஆவணங்களை தயார் செய்து வாகனங்களை விற்கும் மோசடிக் குற்றங்கள் சென்னையில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(தகவல்கள் : ஆர்.சுப்ரமணியன், செய்தியாளர்)
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com