சென்னை: ஆள்மாறாட்டம் செய்து ரூ. 3 கோடி மதிப்பு சொத்தை அபகரிக்க முயற்சி - இருவர் கைது
சென்னையில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் செய்து, போலியான பொது அதிகாரப் பத்திரம் மூலம் அபகரிக்க முயன்ற 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த மூதாட்டி ரேவதி சப்தசாயி (65) என்பவரின் கணவர் சத்யசாயி பெயரில் சென்னையை அடுத்த பனையூர் பகுதியில் 4 ஆயிரத்து 800 சதுர அடி நிலம் உள்ளது. இந்நிலையில் தனது கணவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து அவரது பெயரில் உள்ள நிலத்தை யாரோ அபகரித்துக் கொண்டதாக மூதாட்டி ரேவதி சப்தசாயி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மத்திய குற்றப் பிரிவிலுள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஜான் ஜேக்கப் (45) என்பவரது பெயரில் சப்தசாயி என்பவருடைய 4 ஆயிரத்து 800 சதுர அடி நிலம் பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஜான் ஜேக்கப்பிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஜான் ஜேக்கப் தான் சப்தசாயி போல் ஆள்மாறாட்டம் செய்து பொது அதிகாரப் பத்திரம் பதிவு செய்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. மேலும், ஜான் ஜேக்கப் அந்த நிலத்தை அபகரிக்க சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபரான ராஜ் குமார் (52) உடந்தையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.