சென்னை அதிர்ச்சி: பைக்கில் சென்றவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற கும்பல்

சென்னை அதிர்ச்சி: பைக்கில் சென்றவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற கும்பல்
சென்னை அதிர்ச்சி: பைக்கில் சென்றவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற கும்பல்

சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைக்கில் சென்றவரை அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டி கொன்றது. இந்த கொலை தொடர்பான வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு வைத்திய நாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36). இவர் இன்று மதியம் சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் பைக்கில் குறுக்கே வந்து ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய ஆறுமுகத்தை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்து போனார்.அமைந்தகரை போலீசார் விசாரணையில், ஆறுமுகத்தின் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆயுத தடை சட்டத்தின் கீழும், டிபி சத்திரம் காவல் நிலையத்தில் பெண்வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஆறுமுகத்தை அடையாளம் தெரியாத கும்பல் பைக்கில் வந்து வெட்டி விட்டு தப்பி ஓடுவதை அந்த வழியாக காரில் சென்றவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என்ன காரணத்திற்காக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் யார்- யார் என்பது தொடர்பாக அமைந்தகரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும்  போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த அமைந்தகரை போலீசார் வீடியோவை வைத்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட ஆறுமுகம்  பைனான்ஸ் தொழில் நடத்தி வருவது தெரியவந்தது. அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் உள்ள அவரது பைனான்ஸ் அலுவலகத்திற்கு  தனது நண்பர் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு கும்பல் பின் தொடர்ந்துள்ளது. இதனையறிந்த ஆறுமுகம் அதிவேகமாக புல்லா அவென்யூ வழியாக தப்பி செல்ல முயன்ற போது சாலையில் திரும்புகையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. உடனே அந்த கும்பல் இறங்கி ஓட ஓட ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஆறுமுகம் சரித்திர பதிவேடு ரவுடியான தட்சிணா மூர்த்தியிடம் கடந்த 10 வருடங்களாக கூட்டாளியாக இருந்துவிட்டு, சமீபத்தில் ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளியாக சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.   இதனால் தட்சிணா மூர்த்தி கூட்டாளிகள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பைனான்ஸ் விடும் ஆறுமுகம் பல பேரிடம் மிரட்டி அதிக வட்டி வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதில் ஏற்பட்ட பகை காரணமாக கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம்  எழுந்துள்ளது.கொலை நடந்த இடத்திற்கு அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக ஊடகங்களுக்கு சிசிடிவி காட்சிகள் கிடைக்க கூடாது என்பதற்காக டிவிஆர் கருவியை போலீசார் கடை கடையாக சென்று எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com