”நாங்க யார் தெரியுமா?” - பாஸ்ட்-புட் கடை உரிமையாளர் கையை கத்தியால் கிழித்து தகராறு - மூவர் கைது
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருபவர் பொன்ராஜ் (49), இவரது கடைக்கு வந்த 5 நபர்கள் சில்லி சிக்கன், சிக்கன் ரைஸ் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதையடுத்து கடையில் உள்ளவர்கள் அதனை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, சிக்கன் ரைஸில் போடுவதற்காக வெட்டி வைத்திருந்த சிக்கன் துண்டுகளை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.
இதைக் கண்ட கடைக்காரர் தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு நாங்கள் யார் தெரியுமா அனகாபுத்தூர் ரவுடி சத்யா, எங்களையே கேள்வி கேட்பாயா எனக் கூறி, கடை உரிமையாளரை சரமாறியாக தாக்கி, கத்தியால் கையில் வெட்டி விட்டு தப்பியோடினர்.
இதைத் தொடர்ந்து கடை உரிமையாளர், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கோவூர் சத்யா (28), தரமணி கார்த்திக் (33), தண்டலம் பாலமுருகன் (38), ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கலை மற்றும் மேத்திவ் ஆகியோரை தேடி வருகின்றனர்.