மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!

மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!

மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை டெல்லியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பருப்பு மொத்த வியாபாரியான பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2019ஆம் ஆண்டு பாண்டியராஜன், முருகேசன், ஜெய்கணேஷ், ஹரிகரண், உமா ஆகிய நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர்கள் தமிழகத்தில் இயங்கும் நியாய விலைக்கடை போன்று மத்திய அரசின் பிரதான் மந்திரி யோஜனா என்ற திட்டத்தில் கிஷன் ரேஷன் கடை திட்டமொன்று தொடங்கி இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களிலும் இந்த திட்டத்தை பற்றி பல்வேறு தகவல்கள் விளம்பரங்களை தன்னிடம் காண்பித்து நம்ப வைத்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இந்த கிஷன் ரேஷன் கடை திட்டத்தில் டெண்டர் மூலம் பருப்பு வகைகள் மற்றும் பயிர் வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்து கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசின் திட்டம் என நம்பி 5 கோடி ரூபாய் மதிப்பிலான பருப்பு வகைகள் மற்றும் பயிர் வகைகளை சப்ளை செய்துள்ளார். சப்ளை செய்த பின்பு பல மாதங்கள் ஆகியும் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பருப்பு வியாபாரி விசாரித்தபோது மத்திய அரசில் அப்படி ஒரு திட்டமே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலாஜி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்துள்ளார். இதேபோல மற்றொரு புகாரும் மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வந்துள்ளது.

உடனடியாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி ஆவணங்கள் மோசடி தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மத்திய அரசு திட்டம் எனக்கூறி கிஷான் ரேசன் திட்டத்தை சமூக வலைதளம், நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி உள்ளனர். மேலும் மத்திய அரசு 1.68 லட்சம் ரேஷன் கடைகள் துவங்க உள்ளதாகவும், சுமார் 65 ஆயிரம் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாக போலியாக பரப்புரை செய்துள்ளனர். மேலும் கிஷான் ரேசன் கடை துவங்க ரூ.1.5 லட்சம் செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என மோசடி செய்துள்ளனர்.

இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுபட்ட முக்கிய தரகரான பாண்டியராஜன் கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி கைது செய்தனர். பின்பு பாண்டியராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட ஜெய்கணேஷ் உள்பட சிலர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். குறிப்பாக ஜெய் கணேஷின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக ஆய்வு செய்ததில் கடைசியாக அவரது நண்பர் ஒருவரிடம் பேசிவிட்டு சுவிட்ச்ஆப் ஆகி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது நண்பர் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தும் போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

பின்னர் தனிப்படை போலீசார் மதுரா இடத்திற்கு சென்ற போது அங்கு ஒரு ஹோட்டலில் செல்போன் எண் இருப்பதை காண்பித்துள்ளது. அந்த ஹோட்டலில் அதிகம் பேர் இருந்ததால் போலீசார் திணறி  உள்ளனர். அப்போது ஹோட்டலில் ஒரு நபர் தமிழில் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது அந்த நபர் சென்ற ஹோட்டலில் மறைந்திருந்து பார்த்த போது ஜெய்கணேஷ் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து ஜெய்கணேஷை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மோசடி கும்பலின் தலைவனான இந்த திட்டத்தின் இயக்குனர் ஜெய்கணேஷ் கோயம்புத்தூரில் மிகப் பெரிய பருப்பு வியாபாரியின் மகன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பல வியாபாரிகளை ஏமாற்றி உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து நூதன முறையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. கோயம்புத்தூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த மோசடி குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மத்திய அரசில் இல்லாத கிஷான் ரேஷன் கடை திட்டம் குறித்து விளம்பரப்படுத்தி நூற்றுக்கணக்கான பேரை மோசடி செய்து சுமார் 10 கோடி ரூபாய் அளவில் இந்த கும்பல் ஏமாற்றியுள்ளதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.  கைதான ஜெய்கணேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: ஓடும் காரில் தாயும், 6 வயது மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை - உத்தரகாண்ட்டில் கொடூரம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com