சென்னை | முன்விரோதம் காரணமாக பாக்ஸர் வெட்டிக் கொலை – கதறி அழுத தாய்!
சென்னை ஐஸ் ஹவுஸ் கஜபதி தெருவைச் சேர்ந்தவர் தனுஷ் (24). இவர், நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஒன்பது நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதை தடுக்க சென்ற அவரது நண்பர் அருண்குமார் என்பவரையும் கொடூரமாக தாக்கி விட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மோகன், செந்தில், டேவிட், விஷால், (மற்றுமொரு விஷால்) உள்ளிட்ட ஒன்பது பேரை ஐஸ் ஹவுஸ் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் தனுஷ்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களிடமும் ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.