வயர் கட்..சிசிடிவி மீது ஸ்பிரே.. அரும்பாக்கம் வங்கிக்கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

வயர் கட்..சிசிடிவி மீது ஸ்பிரே.. அரும்பாக்கம் வங்கிக்கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!
வயர் கட்..சிசிடிவி மீது ஸ்பிரே.. அரும்பாக்கம் வங்கிக்கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

சென்னை தனியார் வங்கிக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சூர்யா சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 31.7 கிலோ தங்க நகைகள், 72 மணி நேரத்தில் மொத்தமாக சென்னை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த 13-ம் தேதி அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள ஃபெட் பேங்க் கோல்டு லோன் வங்கியில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று ஊழியர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கத்தி முனையில் கட்டிப்போட்டு, 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இந்தக் கொள்ளையில் வங்கி ஊழியர் முருகன் அவரது நண்பர்கள் சூர்யா, பாலாஜி, சந்தோஷ் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பாலாஜி (28), சந்தோஷ் (30) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முருகன் கொரட்டூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். கொள்ளை சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் இவர்களிடமிருந்து 8.5 கோடி மதிப்பிலான, 18 கிலோ தங்க நகைகள், 2 நான்கு சக்கர வாகனம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையனான சூர்யா என்பவரும் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், முருகன் தங்களுடன் பயின்ற பள்ளி நண்பர்கள் மற்றும் ஜிம் நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து பல நாட்களாக திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி செல்வதற்காக சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் வெளியில் இருந்து மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். நகையை கொள்ளையடித்தவுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேட்டிற்கு சென்று கார் மூலமாக பல்லாவரம் பகுதிக்கு சென்று அங்கு ஒரு லாட்ஜில் நகையை பிரித்து உள்ளனர். குறிப்பாக லாட்ஜில் ஒரு கிலோ நகையை உருக்கும் போது அதிகப்படியான புகை வெளியேறியதால், கொள்ளையர்கள் பயந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அனைவரும் பிரிந்து விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகியப் பகுதிக்கு சென்று பதுங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 14 கிலோ தங்க நகைகள் தொடர்பாக முக்கிய தலைவனான முருகனிடம் விசாரணை நடத்தியபோது, சூர்யாவிடம் நகைகள் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது சூர்யாவிடம் கேட்டப்போது முருகனிடம் தான் நகைகள் இருப்பதாக கூறி இருவரும் சேர்ந்து காவல்துறையினரை குழப்ப முற்பட்டனர். இந்நிலையில் காவல்துறை கிடுக்கு பிடி விசாரணையில் விழுப்புரத்தில் உள்ள சூர்யாவின் நண்பர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து விழுப்புரத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. அதன்பின்பு கணக்கீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை ஆய்வு செய்தபோது மொத்தமாக 13 கிலோ தங்க நகைகள் பிடிபட்டது தெரியவந்தது. மேலும் உருக்கப்பட்ட தங்கமான 700 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை அடிக்கப்பட்ட தங்கத்தை விற்க உதவிய கோயம்புத்தூர் நகைக்கடை நிர்வாகிகள் இரண்டு பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது உடனடியாக அலாரம் அடிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றும், இந்த சம்பவத்தில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொள்ளையன் முருகன் கூட்டாளிகளோடு வங்கிக்குள் நுழைந்தவுடன் வங்கியில் உள்ள கட்டுப்பாட்டு அறை வெளி தொடர்பு செய்ய முடியாதபடி அனைத்து வயர்களையும் துண்டித்து எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடித்து காட்சிகள் பதிவாகாதபடி இருக்க முயற்சித்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த எலக்ட்ரானிக் சாதனங்களை போரூர் பகுதியில் உள்ள கூவ ஆற்றில் வீசி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த உடன் தலைமை அலுவலகத்திற்கு மற்றும் காவல்துறைக்கு அலாரம் அடிக்காமல் தெளிவாக கொள்ளையன் முருகன் திட்டமிட்டு கொள்ளையடித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இரண்டு சாவிகளை பயன்படுத்தினால் மட்டுமே லாக்கரில் இருந்து நகைகளை எடுக்க முடியும். வேலை பார்க்கும் போது லாக்கரை அடிக்கடி கொள்ளையன் முருகனிடம் சாவி கொடுத்து நகைகளை எடுக்க சொல்வதை வழக்கமாக வைத்திருந்ததால், நேரடியாக சென்று ஊழியர்களை மிரட்டி இரண்டு சாவிகளையும் பயன்படுத்தி தங்க நகைகளை கொள்ளை அடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மீதி கொள்ளையர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த 72 மணி நேரத்தில் மொத்த நகைகளையும் மீட்டு, முக்கிய கொள்ளையனான முருகன் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்ததால் காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com