சென்னை வங்கிக் கொள்ளை: முக்கிய நபர் கைது - 18 கிலோ தங்க நகைகள் மீட்பு

சென்னை வங்கிக் கொள்ளை: முக்கிய நபர் கைது - 18 கிலோ தங்க நகைகள் மீட்பு
சென்னை வங்கிக் கொள்ளை: முக்கிய நபர் கைது - 18 கிலோ தங்க நகைகள் மீட்பு

சென்னை தனியார் வங்கி நகைக் கொள்ளையில் தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், கொள்ளையில் ஈடுபட்டவர்களிடமிருந்து 18 கிலோ மதிப்பு கொண்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் தங்க நகைக் கடன் பிரிவில் லாக்கரில் இருந்த பணம், நகைகள் சனிக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டன. வங்கியின் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, அதே வங்கியில் பணியாற்றும் முருகன் மற்றும் இருவர் துப்பாக்கி முனையில் மேலாளர் உள்ளிட்டோரை கட்டிப்போட்டு லாக்கரில் இருந்த நகைகளை கொள்ளையடித்தாக கூறப்பட்டது.

வங்கி மேலாளர் அளித்த தகவலின்பேரில், வடக்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் முருகனின் தொடர்புடைய 15 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் முருகனின் உறவினரான பாலாஜி என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் வங்கி கொள்ளை பற்றி துப்பு கொடுப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நகைகளை கொள்ளையடித்தவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், சென்னை ஃபெடரல் வங்கி கிளை கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முருகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்த முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட நகைகளை காவல்துறையினர் காட்சிப்படுத்தினர். கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில், முதல்கட்டமாக 8 கோடியே 50 ரூபாய் லட்சம் மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வங்கி கிளையில் பணியாற்றிய முருகன் என்பவரே கொள்ளையில் ஈடுபட்டிருந்தார். மேலும் வங்கிக் கொள்ளையில் தலைமறைவாக உள்ள சூர்யாவை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். அத்துடன் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை பார்வையிட்டார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓரிரு நாளில் அனைத்து நகைகளும் மீட்கப்படும் என்று தெரிவித்தார். வங்கிக் கொள்ளை தொடர்பாக இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முக்கிய குற்றவாளியிடம் விசாரணை நடைபெறுவதாகவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்தார்.

மேலும் இந்த வங்கிக் கொள்ளையில் 6 முதல் 7 பேர் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு எதிராக பெரிய வழக்குகள் நிலுவையில் இல்லை என்றும், வங்கியின் பிற ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தற்போது தெரியிவில்லை எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com