சென்னை: தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை; சிக்கிய அஸ்ஸாம் இளைஞர்
தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி கொலை செய்து விட்டு தப்பிய அஸ்ஸாம் இளைஞரை ஓராண்டு தேடுதலுக்குப் பிறகு கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை பாரிமுனை அருகே கடந்த 10.02.2021 அன்று பயன்பாடற்ற பொது கழிப்பிடத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற பூக்கடை போலீசார், பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை சம்பவத்தில் இறந்த நபரின் அடையாளம் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, பூக்கடை உதவி ஆணையாளர் பாலகிருஷ்ண பிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து பார்த்தனர். அப்போது சந்தேக நபரின் உருவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் கொலை செய்யப்பட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த சதிஷ்குமார் என்பதும் இவர் காணாமல் போனதாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து சதிஷ்குமாரின் புகைப்படம் மற்றும் இறந்துபோன நபரின் மண்டை ஓட்டை தடய அறிவியில் கூடத்தில் ஒப்பிட்டு பார்த்ததில் ஒத்துப்போவதாகவும், தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கொலை சம்பவம் நடந்த அன்று இறந்துபோன நபருடன் ஒரு நபர் செல்வது சிசிடிவி பதிவில் தெரியவந்தது. இதையடுத்து அங்க அடையாளங்களை கொண்டு பாரிமுனை சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர விசாரணை செய்ததில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அப்பகுதியில் சுற்றித் திரிபவர் என்பதும் தெரியவந்தது.
ஆவரை பல மாதங்களாக தேடிவந்த நிலையில் அந்த நபர் பாரிமுனை பகுதியில் சுற்றித் திரிந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து பூக்கடை போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் என்பது தெரிந்தது. அவர் தான் கொலை செய்தது என்பது உறுதியானதால் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
விசாரணையில், பகதூர் சில வருடங்களாக பாரிமுனை பகுதியில் சிறு சிறு வேலைகள் செய்து வருவதும், சம்பவத்தன்று (05.02.2021) இரவு இறந்துபோன நபர் பகதூரை மிரட்டி, கோட்டை ரயில் நிலைய நடைமேம்பாலம் அருகில் உள்ள பயன்பாடற்ற பொது கழிப்பிடத்திற்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. பின், தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதும், அப்போது பகதூர், இறந்துபோன சதிஷ்குமார் வைத்திருந்த கத்தியை பிடுங்கி சதிஷ்குமாரை கொலை செய்து விட்டு, வெளி மாநிலத்திற்கு தப்பிச் சென்று பல மாதங்கள் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
சமீபத்தில் சென்னைக்கு வந்தபோது தனிப்படையினரின் தொடர் தீவிர விசாரணையிலும், தேடுதல் வேட்டையிலும் பகதூர் பிடிபட்டதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் பகதூரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.