6 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கேமரா திருடன் கைது - ஸ்கெட்ச் போட்டு பிடித்த சென்னை போலீஸ்

6 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கேமரா திருடன் கைது - ஸ்கெட்ச் போட்டு பிடித்த சென்னை போலீஸ்

6 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த கேமரா திருடன் கைது - ஸ்கெட்ச் போட்டு பிடித்த சென்னை போலீஸ்
Published on

6 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த கேமரா திருடனை பிடித்த தனிப்படை போலீசார், சைக்கிளில் வந்து திருடிச் சென்ற நபரை அதே சைக்கிளை வைத்து மடக்கிப் பிடித்தனர்.

சென்னை ஐசிஎப் பகுதியில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் அம்பத்தூரைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் அஸ்வின் என்பவர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ்கள் திருடு போயின.

இதையடுத்து உடனடியாக மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபரை அடையாளம் கண்டு ஐசிஎப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அஸ்வின் தானே திருடனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன்படி கல்யாண மண்டபத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான சந்தேகப்படும்படியான நபரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மூலமாக பதிவு செய்து கேமரா திருடுபோன விவகாரத்தை பதிவிட்டார். இதனையடுத்து சென்னை முழுவதும் உள்ள பல்வேறு புகைப்படக் கலைஞர்களும் இதேபோல மண்டபத்தில் தங்களது கேமராக்கள் திருட்டு போன தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் வைரலான இந்த பதிவு பற்றிய தகவல் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அப்போது காவலர் சரவணகுமார் என்பவர் இதேபோன்று கடந்த 2017ம் ஆண்டு மயிலாப்பூரில் ஒரு சம்பவம் நடைபெற்றதை நினைவுகூர்ந்து அந்த கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

சந்தேகப்படும்படியான நபர் எங்கிருந்து வந்தார் என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர், சைக்கிளில் வந்து செல்வது கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து அந்த நபர் எந்த பகுதிகளுக்கெல்லாம் சென்றார் என்று ஆய்வு செய்தபோது ராஜமங்கலம் பகுதியில் அவர் சைக்கிள் எடுத்து அடிக்கடி சுற்றி வந்தது தெரியவந்தது.

அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், அந்த நபர் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே தனது சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் வெவ்வேறு பகுதியில் உள்ள திருமண மண்டபங்களுக்குச் சென்று திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என கண்டுபிடித்தனர்.

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த நபரை பின்தொடர்ந்து கொளத்தூரில் உள்ள திருடனின் வீட்டை கண்டுபிடித்தனர். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் பெயர் சம்சுதீன் (51) என்பது தெரிந்தது. பழ வியாபாரம் செய்துவந்த இவருக்கு அதில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், கடந்த 6 வருடத்திற்கு முன்பு சாலையில் கிடந்த செல்போன் ஒன்றை எடுத்துச் சென்று பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் விற்றுள்ளார்.

அதில் சிறு தொகை கிடைக்கவே திருட்டு செல்போனை வாங்கிய நபரோ இதேபோன்று பொருட்கள் இருந்தால் கொண்டுவா என கூற அதற்குப் பிறகுதான் திருமண மண்டபங்களில் புகுந்து பொருட்களை திருடுவதை தனது தொழிலாக மாற்றிக கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு மயிலாப்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் போட்டோகிராபர் உணவருந்த செல்லும் போது அவர் அருகில் வைத்து இருந்த கேமராவை லாவகமாக திருடிக்கொண்டு வந்து பர்மா பஜாரில் உள்ள தனது நண்பர் மூலம் விற்றதில் 50 ஆயிரம் பணம் கிடைத்துள்ளது. இதனால் திருமண நிகழ்ச்சிகளில் கேமரா திருடுவது சுலபமாக இருப்பதாக நினைத்து அதே முறையையே பின்பற்றி வந்ததாக கைதான சம்சுதீன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கடந்த ஆண்டு வில்லிவாக்கத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கேமரா திருடச் சென்றபோது பெண் ஒருவர் தனது கைப்பையில் வைத்திருந்த சுமார் 13 சவரன் நகையை திருடியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 முதல் தற்போது வரை சென்னையில் மயிலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கொளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் என பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் விலையுர்ந்த கேமராக்கள், நகை, செல்போன் உட்பட பொருட்களை திருடி இருப்பதாக தனிப்படை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று நிகழ்ச்சிகளுக்கு டிப்டாப் உடையணிந்த உறவினர் போல் சென்று சகஜமாக உணவருந்திவிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை இந்த நபர் வழக்கமாக வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் போன்ற முக்கிய நபர்கள் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு சென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும் அவர்களது கவனத்தையும் திசை திருப்பலாம் என்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டதாக கைதான சம்சுதீன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட சம்சுதீனிடம் இருந்து சுமார் 15 லட்சம் மதிப்புள்ள கேமரா லென்ஸ் உள்ளிட்ட பொருட்களை மீட்ட காவல் துறையினர் மீதமுள்ள பொருட்களையும் மீட்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், விலை உயர்ந்த கேமராக்களை வாங்கிய பர்மா பஜாரைச் சேர்ந்த வியாபாரியை தேடி வருவதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com