சென்னை: 65 புல்லட் பைக்குகள் தொடர் திருட்டு.. பொறிவைத்து பிடித்த போலீஸ்..!

சென்னை: 65 புல்லட் பைக்குகள் தொடர் திருட்டு.. பொறிவைத்து பிடித்த போலீஸ்..!
சென்னை: 65 புல்லட் பைக்குகள் தொடர் திருட்டு.. பொறிவைத்து பிடித்த போலீஸ்..!

சென்னையில் புதிய புல்லட் வாகனங்களை குறிவைத்து திருடி பல மாவட்டங்களில் விற்பனை செய்துவந்த 3 கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர். 

சென்னை எழும்பூரில் கடந்த 6 ஆம் தேதி எழும்பூர் தலைமை காவலர் குமரவேல் என்பவரின் புதிய புல்லட் இருசக்கர வாகனம் திருடு போனது. இதே போன்று பல்வேறு இடங்களில் வீட்டருகே நிறுத்தப்பட்டுள்ள புல்லட் இருசக்கரவாகனத்தை மட்டும் குறிவைத்து ஒரு கும்பல் இரவு நேரத்தில் திருடி வந்துள்ளனர்.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம், அபிராமபுரம், சேத்துபட்டு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதனால் கொள்ளையர்களை பிடிக்க சென்னை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சுதாகர் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை களம் இறங்கியது. திருட்டு தொடர்பாக தொடர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இருசக்கர வாகனம் கல்பாக்கம் பகுதியிலிருந்து மரக்காணம் வரை சென்று பூஞ்சேரியிலிருந்து கல்பாக்கம் பகுதிகளுக்கிடையே  வேறொரு நபரிடம் கைமாறுவது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பகுதியில் அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் தொடர்பு கொள்ளும் செல்போன் எண்களை வைத்து  தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரே கும்பல் தான் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அந்த பகுதியில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கை சோதனையும் பலப்படுத்தி உள்ளனர். இதே போல் நேற்று அதிகாலை  வழக்கம் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக புல்லட் வாகனத்தில் வந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

 விசாரணையில் அவர் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த சஃபி(27) என்பது தெரியவந்தது. அவர் ஓட்டி வந்த புல்லட் திருடி சென்ற வாகனம் என்பதும், சஃபி அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கி 65க்கும் மேற்பட்ட புல்லட் வாகனத்தை குறி வைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும் வாட்ஸ் ஆப் குழு மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இவர்களது நண்பர்கள் புல்லட் வாகனத்தை இந்த கும்பலிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர். ஆர்டருக்கு ஏற்ப, சென்னையில் தங்கி நோட்டமிட்டு இரவு நேரத்தில் பைக்குகளை திருடி கொண்டு கல்பாக்கம் வரை சென்று விற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே போன்று இந்த கும்பல் கடந்த ஒரு வருடமாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இதனையடுத்து சஃபிக்கை வைத்து இவரது கூட்டாளிகளான கேரளாவை சேர்ந்த சிபி(23) மற்றும் விருது நகரை சேர்ந்த அமீர்ஜான்(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து புதிய 7 புல்லட் இருசக்கர வாகனம் உட்பட 10 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com