சென்னை: ரூ 38 லட்சம் நூதன மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது
செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் பகுதியில் செந்தில், என்பவர் வசித்து வருகிறார். பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வரும் இவருடன், முகைதீன் அப்துல்காதர் என்பவர் கடந்த சில காலங்களாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் முகைதீன், “வெளிநாட்டு உபகரணங்களை வாங்கி விற்கும் தொழில் செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். வரும் லாபத்தில் 60 சதவீத பங்கு தருகிறேன்” என ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்
இதனை உண்மையென நம்பிய செந்தில் மேற்படி முகைதீன் அப்துல்காதர் என்பவருக்கு நேரடியாகவும். ஜி-பே மூலமும் பல தவணைகளாக மொத்தம் ரூ.38 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முகைதீன் அப்துல்காதர், செந்திலை ஏமாற்றும் நோக்கில் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து செந்தில், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து முகைதீன் அப்துல் காதர், அவரது மனைவி மற்றும் ஏஜாஸ் ஆகிய 3 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.