சென்னை | ரூ.6 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் - 8 பேர் கைது
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மாநில போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் 1 கிலோ கொக்கைன் போதைப் பொருளுடன் 5 நபர்களை கைது செய்தனர். இதையடுத்து இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் மூன்று பேரை கைது செய்து 1 கிலோ கொக்கைன், ஒரு கார் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த மீனவர்களான பாண்டி, பழனீஸ்வரன், வனகாப்பக ஊழியர் மகேந்திரன், காசிம், முகமது முபாரக், எட்வர்ட் ஷாம், முகமது இட்ரீஸ், காஜா மொய்தீன் ஆகிய எட்டு பேர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மீனவர்களான பாண்டி மற்றும் பழனீஸ்வரன் ஆகியோர் கடலில் மீன் பிடித்து வந்த போது அவர்களது வலையில் இரு பொட்டலங்கள் கிடைத்துள்ளது. என்ன பொருள் என தெரியாமல் மீனவர்கள் தவித்து வந்த நிலையில், தெரிந்தவரான வனகாப்பாளர் மகேந்திரனிடம் அந்த பொட்டலத்தைக் கொடுத்துள்ளார்.
அப்போது அவர் பிரித்து பார்த்து இது விலையுயர்ந்த போதைப் பொருளான கொக்கைன் என தெரிவித்துள்ளார். இதனை சென்னையில் விற்பனை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி போதைப்பொருள் கும்பலுடன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இதையடுத்து பல பேரிடம் பேரம் பேசிய நிலையில், நேற்று சென்னையில் காரில் தனித் தனியாக விற்பனை செய்ய 1 கிலோ கொக்கைனுடன் வந்த போது கோயம்பேட்டிலும், கிண்டியிலும் வைத்து போலீசார் 8 நபர்களை கைது செய்துள்ளனர்.