சென்னை | திரிபுரா மாநில காதல் ஜோடியிடம் 130 கிராம் போதைப் பொருள் பறிமுதல்
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை தரமணி பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்திய சிலரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் வால்டாக்ஸ் சாலை பகுதியில், வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து வால்டாக்ஸ சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தரமணி தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அங்கிருந்த ஒரு காதல் ஜோடியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் திரிபுராவைச் சேர்ந்த சுகைல் உசேன் (22), மற்றும் 17 வயது பெண் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், சுகைல் உசேன் பெரம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார்.
இதையடுத்து இவர்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்று போதைப் பொருட்களை வாங்கி வந்து, சென்னையில் தங்கி வடமாநில இளைஞர்களுக்கு சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஜோடியிடம் இருந்து 130 கிராம் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். ஆய்வுக்குப் பிறகே அது என்ன வகையான போதைப்பொருள் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.