சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி 1.9 கோடி ரூபாய் மோசடி: ஒருவர் கைது
சென்னையில் 1.9 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை மடிபாக்கத்தைச் சேர்ந்தவர் ஜீகாராம் சௌத்திரி (47). இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஈஞ்சம்பாக்கம் கிராமம் வி.ஜி.பி கோல்டன் பீச் லேஅவுட்டில் 3 பிளாட்டுகளுக்கு போலியான பத்திரம் தயார் செய்து அதை நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், அதில் ஒரு பிளாட்டை திருப்பூரைச் சேர்ந்த பன்னீர் என்பவருக்கு சொந்தமானது போலவும், அதை விற்பனை செய்ய ஜீகாராம் சௌத்திரிக்கு பொது அதிகாரப் பத்திரம் மற்றும் பதிவு செய்யப்படாத விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளது போலவும் போலியான ஆவணங்களையும் அவர் தயார் செய்துள்ளார்.
இதனையடுத்து சென்னை மேற்கு சி.ஐ.டி நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஜீகாராம் சௌத்திரி அந்த ஆவணங்களை காட்டி தன்னிடம் 3 பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளதாகக் கூறி அவற்றை 9 கோடிக்கு விற்பனை செய்வதாக சுரேஷிடம் ஒப்பந்தம் செய்துக் கொடுத்துள்ளார். மேலும், சுரேஷிடம் இருந்து இந்த ஒப்பந்தத்திற்காக 1.90 கோடி ரூபாயை ஜீகாராம் சௌத்திரி முன்பணமாகவும் பெற்றுள்ளர்.
இந்நிலையில், சுமார் 6 மாத காலம் ஆகியும் பத்திரப்பதிவு செய்து கொடுக்காமலும், பணத்தையும் திரும்ப கொடுக்காமலும் சுரேஷை ஜீகாராம் சௌத்திரி ஏமாற்றி வந்த நிலையில், இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் சுரேஷ் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் ஜீகாராம் சௌத்திரி நில மோசடியில் ஈடுபட்டு சுரேஷை ஏமாற்றி சுமார் 1.90 கோடி ரூபாய் வரை மோசடி செய்து தலைமறைவானது உறுதியான நிலையில், போலீசார் ஜீகாராம் சௌத்திரியை வலைவீசித் தேடி வந்தனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னல்கள் மூலம் அவர் செல்லும் இடங்களை கண்காணித்து வந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஜீகாராம் சௌத்திரியை சென்னை மடிப்பாக்கத்தில் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.