சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை
சென்னையில் வடமாநில பைனான்சியர் உள்ளிட்ட 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காண, காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
பைனான்ஸ் தொழில் செய்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல், மகள் பிங்கியுடன் சௌகார்பேட்டையில் வசித்துள்ளார். நேற்று மாலை வெளியே சென்றிருந்த பிங்கி, வீடு திரும்பியபோது, பெற்றோரும் சகோதரரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
தகவலறிந்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமாரும், யானைக்கவுனி காவல்துறையினரும் நேரில் வந்து விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தலில் சந்தின் வீட்டிலிருந்து ஒருவர் ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
வரதட்சணை விவகாரத்தில் ஷீத்தலின் மனைவி குடும்பத்தினருடன் பிரச்னை இருப்பது தெரியவந்ததால், சம்பந்தி குடும்பத்தினர் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.