சென்னை: விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவரின் சடலத்தை முட்புதரில் வீசிய அவலம்

சென்னை: விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவரின் சடலத்தை முட்புதரில் வீசிய அவலம்
சென்னை: விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவரின் சடலத்தை முட்புதரில் வீசிய அவலம்

சென்னையில், குளிப்பதற்கு அறை எடுத்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனை மறைக்க சடலத்தை மாடியில் இருந்து தூக்கி வீசிய அவலம் அரங்கேறியுள்ளது.

சென்னை எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகம் அருகே முட்புதரில் கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதிக்கு அருகில் உள்ள தங்கும் விடுதி மேலாளர் பீர்முகமது என்பவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன், உடலை ஆய்வு செய்த நிலையில், தடயவியல் துறை உதவி இயக்குநர் சோபியாவும் சம்பவ இடத்துக்கு வந்து தடையங்களை சேகரித்தார். இதனையடுத்து அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் யார் என்று அடையாளம் தெரியாததால் அங்கேயே வைக்கப்பட்டது.

இந்நிலையில், முதலில் தகவல் அளித்த தங்கும் விடுதி மேலாளர் பீர்முகமதிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தங்கும் விடுதி ஊழியர்களிடம் தனித்தனியே போலீசார் விசாணை நடத்தினர். அப்போது ரூம்பாயாக வேலை செய்து வரும் அயனாவரத்தைச் சேர்ந்த ரவி என்பவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து சிபிசிஐடி அலுவலகம் அருகே கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம், அந்த தங்கும் விடுதியில் குளிப்பதற்காக அறை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் என்பதும் அந்த தங்கும் விடுதியில் தான் நடந்தது என மறைப்பதற்காக தங்கும் விடுதி மேலாளர் பீர்முகமது, ரூம்பாய் ரவி ஆகியோர் சடலத்தை தங்கும் விடுதி மாடியில் இருந்து முட்புதருக்குள் தூக்கி வீசியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொண்டவர் பெயர் ராஜ்குமார் (45) ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 3ம் தேதி தேதி தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கிய அவர், அன்று முழுவதும் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த விடுதி மேலாளர் பீர்முகமது, ரூம்பாய் ரவி ஆகியோர் 4ம் தேதி அறை கதவை தட்டியுள்ளனர். கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது மின் விசிறியில் நைலான் கயிறு மூலம் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த 2 பேரும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் நள்ளிரவில் மேன்சன் மாடியிலிருந்து முட்புதிரில் ராஜ்குமார் உடலை தூக்கி எறிந்துள்ளனர். உடல் அழுகி விட்டதால் தாம் சிக்கிக் கொள்ள மாட்டோம் என நினைத்து மேலாளர் பீர்முகமதுவே எழும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆந்திராவிற்கு தப்பிச் சென்ற ரூம்பாய் ரவியையும் நைசாக பேசி சென்னைக்கு வரவழைத்த போலீசார், விடுதி மேலாளர் பீர்முகமது, ரூம்பாய் ரவி ஆகியோரை கைது செய்தனர். கைதான விடுதி மேலாளர் பீர் முகமது, ரூம்பாய் ரவி ஆகியோர் மீது 177- பொய்யான தகவல்களை தருதல், 201- சாட்சியத்தை மறைத்தல், 202- குற்றம் பற்றிய தகவல்களை தராமல் உள்நோக்கத்தோடு மறைத்தல், 203- புரியப்பட்ட குற்றத்தின் பொருட்டு பொய்யான தகவல்களை அளித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com