செங்கல்பட்டு: கடந்த வாரம் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக மீனவ இளைஞர் வெட்டி படுகொலை
கடப்பாக்கத்தில் மீனவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடந்த மீனவர் கொலைக்கு பழிக்குப்பழியாக தொடரும் கொலைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியைச் சேந்தவர் ரமேஷ் (44). இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு வழக்கு தொடர்பாக புதுச்சேரி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ், கடப்பாக்கம் மீனவர் குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, மர்ம நபர்கள் ரமேஷை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை பிடித்த சூணாம்பேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொலையுண்ட ரமேஷ் தங்கி இருந்த இடத்தை கொலையாளிகளுக்கு காட்டிக் கொடுத்ததாக கூறப்படும் அவரது நண்பர் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (23) இன்று காலை மர்ம நபர்காளால் சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். பின்னர் துண்டிக்கப்பட்ட தலையை ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.
இதையடுத்து அங்கு வந்த சூணாம்பேடு காவல் துறையினர் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், ரமேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருப்பதாகவும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்தூறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.