சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
சென்னை முகப்பேரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வருகிறது.
சென்னை முகப்பேர் அருகே அயப்பாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சுமித்ரா என்பவர் தனது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இருவர், சுமித்ராவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியது. இது குறித்து சுமித்ரா அளித்த புகாரின் பேரில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளவர்களின் படத்தை பழைய குற்றவாளிகளுடனும் காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர்.