அரசுக் குடியிருப்புகளை வாடகைக்கு விட்ட ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு
சென்னையில், மத்திய அரசுக் குடியிருப்பை சட்டவிரோதமாக வாடகைக்கு விட்ட ஊழியர்கள் 16 பேர் உள்பட 35 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் குடியிருப்பை சிலர் வாடகைக்கு விடுவதாக எழுந்த தொடர் புகார்களைத் அடுத்து, கே.கே.நகரில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் சிபிஐ தனிப்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், சாஸ்திரி பவன் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. அத்துடன் சாஸ்திரி பவனில் பணிபுரியும் அலுவலக ஊழியர் திருநாவுக்கரசு, வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு தரகராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் உள்பட 35 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.