விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: தீவிரமாகும் சிபிசிஐடி விசாரணை
விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது அப்பெண்ணிடமும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேற்று முன்தினம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் வீடுகளுக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். 8 பேரின் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர், வீட்டில் இருந்த செல்போன், பென் ட்ரைவ், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இடங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறிய நிலையில், கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் விசாரணை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்பி முத்தரசி மேற்பார்வை செய்கிறார். இவர் குழுவில் டிஎஸ்பி வினோதினி தலைமையில் 3 குழுக்கள் பிரிக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சம்பந்தப்பட்ட பெண்ணிடம் அடுத்தகட்டமாக சிபிசிஐடி சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று, இந்த விசாரணையானது செய்யப்பட்டுள்ளது.