பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு கட்டாய கருக்கலைப்பு - உறவினர்மீது வழக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் சிறுமிக்கு கட்டாய கருக்கலைப்பு செய்த உறவினர்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் 16 வயது சிறுமி ஒருவரை கடந்த 2021ஆம் ஆண்டு வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். ஒரு வாரத் தேடலுக்குப்பின் சிறுமியை மீட்ட போலீசார் அவரை குழந்தைகள் நலக்குழுவிடம் (CWC) ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோரை எச்சரித்த குழுவானது அவர்களிடம் எழுத்துப்பூர்வ வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு குழு அழைக்கும்போதெல்லாம் தங்கள்முன்பு சிறுமியை கொண்டுவந்து நிறுத்தவேண்டும் என்றும் கூறி அனுப்பியிருக்கிறது. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி இருவரும் 4 மாத கருவை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்திருக்கின்றனர். கடந்த மாதம் மீன்டும் சிறுமி குழந்தைகள் நலக்குழு முன்பு நிறுத்தப்பட்டபோது இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி கூறியது உண்மை என தெரியவந்ததை அடுத்து சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி மீது இந்திய சட்டப்பிரிவு 313இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்திருக்கின்றனர். விசாரணையில் சிறுமியை கான்பூர் அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்தது தெரியவந்திருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.