கார் மோதி ஓட்டுநர் கால் உடைந்த விபத்து - சொகுசு கார் ஓட்டிவந்த நபர்மீது வழக்குப்பதிவு

கார் மோதி ஓட்டுநர் கால் உடைந்த விபத்து - சொகுசு கார் ஓட்டிவந்த நபர்மீது வழக்குப்பதிவு
கார் மோதி ஓட்டுநர் கால் உடைந்த விபத்து - சொகுசு கார் ஓட்டிவந்த நபர்மீது வழக்குப்பதிவு

கார் ஓட்டுநர் மீது திரையரங்கு உரிமையாளர் மகனும், பாஜக பிரமுகரின் சகோதரருமான ரேவந்த் என்பவரின் சொகுசு கார் அதிவேகமாக மோதியதில் தங்கள் வாழ்வாதாரமே போய்விட்டதாக கார் ஓட்டுநரின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகர் சாரங்கபாணி தெருவைச் சேர்ந்தவர் ரேவந்த் (26). இவர் ரோகிணி திரையரங்க உரிமையாளர் பன்னீர் செல்வத்தின் மகன். நேற்று அடையாறு மேம்பாலம் அருகே உள்ள முத்துலட்சுமி பூங்கா எதிரே இவர் பிஎம்டபிள்யூ காரில் வேகமாக வந்தபொழுது நடந்து சென்ற அடையாறு அருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சோலைமுத்து (35) என்பவர் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரது வலது கால் மற்றும் தொடைப்பகுதியில் எலும்புமுறிவு ஏற்பட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக திரையரங்கு உரிமையாளர் மகன் ரேவந்த் அவரை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்துள்ள சோலைமுத்துவின் மனைவி தேவி கூறுகையில், "விபத்தை ஏற்படுத்திய பிறகு ரேவந்த் வழக்கறிஞர்களுடன், வந்து வழக்கு ஏதும் போலீசாரிடம் கொடுக்கவேண்டாம் என சொன்னார்கள். மருத்துவத்திற்கான ஆகும் செலவை தருவதாகவும் கூறி புகார் அளிக்கவேண்டாம் எனவும் கேட்டு கொண்டனர். எனது கணவரின் இரண்டு கால்களும் பலத்த காயம் அடைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. கணவருடன் சென்ற எனது 12 வயது மகளுக்கும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நான் வீட்டு வேலை செய்துவருகிறேன். எப்படி குடும்பத்தை நடத்துவேன்? குழந்தைகளை எப்படி படிக்க வைக்க உள்ளேன்? என்று தெரியவில்லை" என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்படுத்திய கார் பாஜக பிரமுகர் வினோஜ் பி. செல்வமுடையது என தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் பாஜக பிரமுகரின் சகோதரர் ரேவந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டினாரா? என சோதனை செய்தபோது அது இல்லை என தெரியவந்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் சொகுசு காரை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com