சமூகசேவை செய்வோரின் குற்றச்செயல்களை ஏற்க இயலாது: குழந்தை விற்ற வழக்கில் நீதிமன்றம் கருத்து

சமூகசேவை செய்வோரின் குற்றச்செயல்களை ஏற்க இயலாது: குழந்தை விற்ற வழக்கில் நீதிமன்றம் கருத்து
சமூகசேவை செய்வோரின் குற்றச்செயல்களை ஏற்க இயலாது: குழந்தை விற்ற வழக்கில் நீதிமன்றம் கருத்து

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில், ‘இதயம்’ காப்பக உதவியாளர் மாதர்ஷாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இக்காப்பக இயக்குனர், கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் இரண்டு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி அக்குழந்தைகளுக்கான போலி இறப்பு சான்றிதழை உருவாக்கிக்கொண்டு, அக்குழந்தைகளை முறைகேடாக வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காப்பகத்தின் இயக்குனர் சிவகுமார், இவரது உதவியாளர் மாதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட 7 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிவகுமாரின் உதவியாளராக பணிபுரிந்த மாதர்ஷா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தொடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி குழந்தைகளை சட்டவிரோதமாக பிறருக்கு விற்பனை செய்துள்ளனர். இதில் ஆவணங்களும் முறைகேடாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் தயார் செய்வதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. சமூக சேவை செய்பவர்கள் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை ஏற்க இயலாது" எனக்கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞர் மனுவை திரும்ப பெறுவதாகக் கூறினார். அதையடுத்து ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com