சென்னை: குப்பைமேட்டில் கிடந்த எரிந்த சடலம் - சினிமா பைனான்சியர் உட்பட 3 பேர் கைது

சென்னை: குப்பைமேட்டில் கிடந்த எரிந்த சடலம் - சினிமா பைனான்சியர் உட்பட 3 பேர் கைது
சென்னை: குப்பைமேட்டில் கிடந்த எரிந்த சடலம் - சினிமா பைனான்சியர் உட்பட 3 பேர் கைது

நொளம்பூரில் சினிமா பைனான்சியரிடம் வேலைசெய்த நபர் அடித்துக்கொன்று குப்பைமேட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சினிமா பைனான்சியர் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கோயம்பேடு அடுத்த நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன்(48). சினிமா பைனான்சியரான இவரது வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததையடுத்து நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவானதும், ஒரு அறையில் மட்டும் ரத்தக்கறைகள் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் சினிமா பைனான்சியர் வெங்கட்ராமன், அவரிடம் பணிபுரியும் மதுரவாயலைச் சேர்ந்த சரவணன்(29), திலீப்(30) ஆகிய மூன்று பேரும் நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்து அயனம்பாக்கத்தைச் சேர்ந்த பாபுஜி என்பவரை கொலை செய்து அவரது உடலை கொளப்பாக்கம் விமான நிலையம் பின்பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் வைத்து எரித்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நொளம்பூர் போலீசார் மாங்காடு போலீசாருடன் இணைந்து சென்று பார்த்தபோது உடல் கருகிய நிலையில் இருந்த பாபுஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சினிமா பைனான்சியரான வெங்கட்ராமனிடம் பாபுஜி கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்து சுமார் ஐந்து பவுன் நகை மற்றும் கலெக்ஷன் பணத்தையும் கையாடல் செய்ததாகவும், அதுமட்டுமின்றி வெங்கட்ராமன் குறித்து பல்வேறு இடங்களில் அவதூறாக பேசி வந்ததும் தெரியவந்தது.

மேலும் தலைமறைவாக இருந்த பாபுஜி கோயம்பேடு பஸ் நிலையம் அருகே வந்தபோது சரவணன், திலீப் இருவரும் சேர்ந்து பாபுஜியை காரில் கடத்திக்கொண்டு வெங்கட்ராமன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு வீட்டில் வைத்து நகை, பணம் குறித்து கேட்டு இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் பலமாக தாக்கியதில் பாபுஜி வீட்டிலேயே இறந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை எடுத்துச்சென்று மாங்காடு அருகே கொளப்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் பெட்ரோல் ஊற்றி வைத்து எரித்துவிட்டது தெரியவந்தது.

மேலும் நகை, பனம் திருடியதற்காக பாபுஜியை அழைத்து கொலை செய்தார்களா அல்லது அதிக அளவில் பணத்தை மோசடி செய்ததால் கொலை செய்தார்களா அல்லது கொலைக்கு பெண் விவகாரம் ஏதாவது உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் நொளம்பூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவர் கடத்தப்பட்ட இடம் கோயம்பேடு பேருந்து நிலையம் என்பதால் தற்போது இந்த வழக்கு கோயம்பேடு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com