குடும்பத் தகராறில் அண்ணனை கொல்ல அரிவாளுடன் திரிந்த தம்பி: வைரல் வீடியோவால் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் அண்ணனை வெட்டி கொலை செய்ய பட்டப்பகலில் கத்தி அருவாளுடன் வந்த தம்பி, சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தைச் சேர்ந்த அறிவானந்தம், வனத்தாய் தம்பதியினருக்கு அருண், அர்ஜூனன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்தமகன் அருண் மதுரை செல்லூர் பகுதியில் வசிப்பதாகவும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாவது மகன் அர்ஜூனன் கட்டத்தேவன்பட்டியில் உள்ள தனது மனைவி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அறிவானந்தம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் வனத்தாய் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு வந்த அருண் தன்னுடைய தாய் வனத்தாயுடன் சண்டையிட்டதால் அவர் விட்டை விட்டு வெளியேறி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த தம்பி அர்ஜூனன், அண்ணன் அருணை வீட்டை விட்டு வெளியேறுமாறும், தாய் வீட்டை விட்டு வெளியே போனதற்கு நீதான் காரணம் என அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் அண்ணன் அருணை கொலை செய்ய திட்டம் தீட்டிய தம்பி அர்ஜூனன், அவரது மாமனார் மொக்கத்துரை, மைத்துனன் வனராஜா, அடையாளம் தெரியாத நபர் என நான்கு பேர் பட்டாக்கத்தி, அரிவாளுடன் வந்து அருணை வெட்ட முயன்றுள்ளனர்.
இதைக்கண்ட அருண் அவரது மனைவி ரோஜா மற்றும் இருபெண் குழந்தைகளும் பயந்து கதவை அடைத்து கொண்ட சூழலில் வெகுநேரமாக நான்கு பேரும் கத்தி அரிவாளுடன் காத்திருந்தனர். அவர்களை உறவினர்கள் தடுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது அருண் காவல் அவசர அழைப்பு எண் 100க்கு அளித்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி காவல்நிலைய போலீசார் இந்த கொலை மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.