கட்டட வரைபட அனுமதிக்கு லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட பெண் ஊராட்சி தலைவர் கணவருடன் கைது

கட்டட வரைபட அனுமதிக்கு லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட பெண் ஊராட்சி தலைவர் கணவருடன் கைது
கட்டட வரைபட அனுமதிக்கு லஞ்சம் - கையும் களவுமாக பிடிபட்ட பெண் ஊராட்சி தலைவர் கணவருடன் கைது

கட்டட வரைபட அனுமதிக்காக லஞ்சம் பெற்ற பஞ்சாயத்து தலைவரை கணவருடன் கைது செய்து லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வேலன் நகர் என்னும் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது மனைவி பூர்ணிமா பெயரில் வாங்கிய இரு மனையிடங்களுக்கு கட்டட வரைபட அனுமதி (பிளான் அப்ரூவல்) கோரி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணமாக ரூபாய் 21,092 செலுத்தியுள்ளார். இதையடுத்து குறிப்பிட்ட காலகெடுவிற்கு பின்னர் கார்த்திக் ஊராட்சி தலைவரான சாவித்திரியிடம் பிளான் அப்ரூவல் குறித்து கேட்டுள்ளார். அப்போது தனது கணவர் ராஜனிடம் ரூபாய் 20 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே கட்டட வரைபட அனுமதி வழங்க இயலும் என சாவித்திரி தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக் இவ்வளவு பணம் தர இயலாது என கூறவே லஞ்ச தொகையினை ரூபாய் 15 ஆயிரமாக குறைப்பதாகவும் இதனையும் தர மறுத்தால் பிளான் அப்ரூவல் வழங்க இயலாது என ஊராட்சி தலைவர் சாவித்திரியும் அவரது கணவரான ராஜன் என்பவரும் கறாராக தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையில் கார்த்திக் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கார்த்திக்கிடம் ரூபாய் 15 ஆயிரத்தை கொடுத்து பிளிச்சி ஊராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அலுவகத்தினுள் சென்ற கார்த்திக், ஊராட்சி தலைவர் சாவித்திரியிடம் லஞ்ச பணத்தை கொடுத்தள்ளார்.

அப்போது அருகில் இருந்த அவரது கணவர் ராஜன் பெற்று கொண்டார். அதுவரை மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பிளிச்சி பஞ்சாயத்து தலைவி சாவித்திரி மற்றும் அவரது கணவர் ராஜனை கைது செய்தனர். மேலும், ஊராட்சி அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஊராட்சி தலைவர் சாவித்திரி அப்பகுதி அதிமுக மகளிர் அணி தலைவராகவும் இவரது கணவர் ராஜன் அதிமுக கிளை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகின்றனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com