வேலை கிடைக்கும் என்பதற்காக இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
இருசக்கர வாகனம் இருந்தால்தான் வேலை தருவேன் எனக்கூறியதால் அதற்காக வாகனத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கன்ன செட்டித் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் கடந்த 24ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது அதனைக் காணவில்லை. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யா சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வாகனம் திருடுபோன இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் பைக்கை திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து சரண்யாவின் புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட யோகேஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பல நாட்களாக வேலையின்றி தவித்ததாகவும், இருசக்கர வாகனம் வைத்திருந்தால் தான் வேலை கிடைக்கும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறியதால் பைக்கை திருடினேன் எனவும் யோகேஸ்வரன் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.