பெங்களூரை உலுக்கிய மரணம்.. யார் இந்த அதுல் சுபாஷ்? மனைவி மீது சுமத்திய பகீர் குற்றச்சாட்டுகள் என்ன?
பெங்களூரில் மனைவியால் துன்புறுத்தப்பட்டதாகக்கூறி, உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர், தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
யார் இந்த அதுல் சுபாஷ்?
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ். இவர் பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். மேட்ச் மேக்கிங் இணையதளத்தில் நிகிதாவை சந்தித்து 2019 இல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
விபரீத முடிவு
கடந்த திங்கள்கிழமை காலை 6:00 மணியளவில் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலிசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து சம்பவம் நடந்த பிளாட்டுக்கு சென்ற போலிசார், சுபாஷ் வசித்து வந்த வீடு உட்பக்கமாக பூட்டி இருந்ததைக்கண்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அதுல் சுபாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலத்தைக் கண்டனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின் அந்த வீட்டை பரிசோதனை செய்த போலிசார், சுபாஷ் தான் தற்கொலை செய்துக்கொள்ளும் முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் 24 பக்க குறிப்பை கைப்பற்றினர்.
24 பக்க குறிப்பில் இருந்தவை..
முதலில் 24 பக்க குறிப்பை கைப்பற்றிய போலிசார் அதில் ஒவ்வொரு பக்கத்திலும், "நீதி இஸ் டியூ" என்று சுபாஷ் கைப்பட எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அதில் தனது தற்கொலைக்கு காரணம் தனது மனைவி நிகிதா சிங்கானியா, மாமியார் நிஷா சிங்கானியா, மனைவியின் சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் அவரது மனைவியின் மாமா சுஷில் சிங்கானியா என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவியின் குடும்பத்தினர் தன்னிடம் பலமுறை பல லட்சம் ரூபாய் பணம் கேட்டு பெற்றனர். ஒரு முறை அதிகப்பணம் கேட்டதால் பணம் கொடுக்க மறுக்கவே, தனது மனைவி, குழந்தையுடன், 2021ல்அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும், அவர் தனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் தனது மகனை வைத்து மிரட்டி பணம் பறிக்க நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், தன்னுடைய மனைவியும், அவரது குடும்பத்தினரும் தனக்கு எதிராக குடும்ப வன்முறை, பாலியல் துஷ் பிரயோகம், பணத்துக்காக துன்புறுத்தல் போன்ற வழக்குகளை பதிவிட்டனர். அந்த வழக்கினை விசாரித்த உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்ற நீதிபதியும், தனது பேச்சைக் கேட்கவில்லை என்றும், நீதிமன்ற அதிகாரி ஒருவர் நீதிபதி முன் லஞ்சம் வாங்கியதாகவும் சுபாஷ் தன்னுடைய குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மகனுக்கும் மனைவிக்கும் மாதந்தோறும் ₹ 80,000 பராமரிப்புத் தொகையாக மனைவிக்கு வழங்க நீதிமன்றம் கூறியதாகவும் , ஆனால் நிகிதா இதை ₹ 2 லட்சமாக உயர்த்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் மீதுள்ள பொய் வழக்கைத் தீர்ப்பதற்கு ₹ 3 கோடியை வற்புறுத்தியதாக சுபாஷ் புகார் தெரிவித்து இருந்தார்.
மகனுக்கு கடிதம்
"மகனே - உன்னை முதன்முதலில் பார்த்தபோது, உனக்காக என் உயிரைக் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, உன்னால் என் உயிரைக் கொடுக்கிறேன். இப்போது உன் முகம் கூட நினைவில் இல்லை. உனக்கு 1 வயது ஆகிறது. சில சமயங்களில் வலியின் சாயலைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை ”என்று அதுல் கடிதத்தில் எழுதினார்,
“நான் உயிரோடு இருந்து பணம் சம்பாதிக்கற வரைக்கும் உங்க தாத்தா, பாட்டி, மாமா, என்னை மிரட்டி அதிகமாக பணம் பறிக்க உன்னை ஒரு கருவியா பயன்படுத்தினார்கள். இதெல்லாம் தேவையில்லாமல் என் அப்பா, அம்மா, அண்ணன்னு தொல்லை கொடுக்க முடியாது” என்று அதுல் தன் மகனுக்கு எழுதினார்.
சுபாஷ் சகோதரன் பிகாஸ் குமார் சொல்வதென்ன?
"என் சகோதரன் அவரது மனைவி மகனுக்காக எல்லாவற்றையும் செய்தான். மனைவியின் தொல்லைக்குறித்து அவர் என்னிடமோ அல்லது எங்கள் தந்தையிடமோ விவாதித்திருந்தால் - இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட நாங்கள் அவருக்கு உதவியிருப்போம்... எனது சகோதரன் உண்மையுடன் இருந்தால் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும், இல்லையெனில் அவர் தவறு செய்திருப்பதற்கான ஆதாரத்தை எனக்குக் கொடுங்கள் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறேன். பெயரிடப்பட்டுள்ள நீதிபதி மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். ” என்றார்.
வீடியோவில்
பிகாஸ் தனது வீடியோவில்,” இந்த வழக்கில் நான் வெற்றி பெற்றால், எனது சடலத்தை கங்கையில் அர்ப்பணிக்கவும், இல்லையெனில் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள சாக்கடையில் அர்ப்பணிக்கவும்.” என்று இருந்தது.
இதைஅடுத்து தொழில்நுட்ப வல்லுநரின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது மாமியார் நிஷா சிங்கானியா, மனைவியின் சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் அவரது மனைவியின் மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.