குப்பைத் தொட்டியை தொட்டதற்காக தலித் கர்ப்பிணி அடித்துக் கொலை!
வீட்டில் இருந்த குப்பைத் தொட்டியை தெரியாமல் தொட்டுவிட்டதற்காக, அடித்து உதைக்கப்பட்ட தலித் கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் புலண்ட்ஷர் மாவட்டத்தில் உள்ளது கேட்டல்புர் பன்சோலி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் திலிப் குமார். இவர் மனைவி சாவித்ரி தேவி. தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகள் இருக்கிறார். சாவித்ரி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்கள் அந்தக் கிராமத்தில் தாகூர் சமூகத்தைச் சேர்ந்த அஞ்சு தேவி என்பவர் வீட்டருகே கடந்த 15-ம் தேதி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் வீட்டுக் குப்பைத் தொட்டியை எதிர்பாராதவிதமாகத் தொட்டுவிட்டார் சாவித்ரி.
தீட்டு ஏற்படுத்திவிட்டதாகக் கூறி, சாவித்ரியை சரமாரியாகத் தாக்கியுள்ளார் அஞ்சுதேவி. அவர் மகன், ரோகித் குமார், நிறைமாதக் கர்ப்பிணி என்றும் பாராமல், சாவித்ரியின் வயிற்றில் எட்டி மிதித்துள்ளார். கடும் வலியால் துடித்த சாவித்ரி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார். இந்தச் சம்பவம் அவரது ஒன்பது மகள் கண்முன் நடந்தது. பிறகு சமாளித்து வலியுடன் நடந்து வீட்டுக்குச் சென்றார். கணவரிடம் கூறினார். சாவித்ரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவரை வீட்டுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் சனிக்கிழமை சாவித்ரியின் உடல் நிலை மோசமானது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.