ஆவடி: கூட்டத்தில் புகுந்து நகைகளை திருடியதாக இரு பெண்கள் கைது
ஆவடியில் திருப்பதி குடையை காண காத்திருந்த பக்தர்களிடம் 5 சவரன் நகையை கட்டிங் பிளைடு மூலம் பறித்ததாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆவடியில் திருப்பதி திருக்குடையை காண பொதுமக்கள் பலர் காத்திருந்தனர். அப்பொழுது கூட்டத்தில் புகுந்த பெண்கள் இருவர் ஆவடியை சேர்ந்த லக்ஷ்மி என்ற பெண் பின்னால் நின்றுக்கொண்டு அவர் அணிந்திருந்த 3 சவரன் நகையை அவருக்கு தெரியாமல் கட்டிங் பிளைடு மூலம் கட் செய்து திருடியுள்ளனர். இதையடுத்து பாப்பம்மாள் என்பவரிடமும் 2 சவரன் நகைகளை திருடியுள்ளனர்.
இந்நிலையில், இவர்களை அங்கிருந்த ஒருவர் நோட்டமிட்டு வந்துள்ளார். பின்னர் அவர்கள் நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களை பின் தொடர்ந்து சினிமாவில் வருவதுபோல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று பட்டாபிராம் அருகே வைத்து ஆட்டோவை மடக்கி பிடித்துள்ளார். பின்னர் இருவரையும் இறக்கி ஆவடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி காவல் துறையினரிடம் நடந்தவற்றை கூறி ஒப்படைத்துள்ளார். இரு பெண்களையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லதா மற்றும் கீதா என்பதும் இவர்கள் மக்கள் கூட்டமாக இருக்கும் பேருந்து நிலையம்,மார்க்கெட் பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு தெரியாமல் கட்டிங் பிளேடு மூலம் நகை பறிப்பில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரையும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.