கல்லூரி பற்றி ஆட்சியரிடம் புகாரளித்த மாணவர்களை மிரட்டிய பேராசிரியர்... வைரலாகும் ஆடியோ

கல்லூரி பற்றி ஆட்சியரிடம் புகாரளித்த மாணவர்களை மிரட்டிய பேராசிரியர்... வைரலாகும் ஆடியோ
கல்லூரி பற்றி ஆட்சியரிடம் புகாரளித்த மாணவர்களை மிரட்டிய பேராசிரியர்... வைரலாகும் ஆடியோ

கல்லூரி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த மாணவ மாணவிகளை பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேராசிரியரின் நடவடிக்கைக்கு சமூகவலைதளங்களில் கண்டனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் வரலாற்று துறையில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவியொருவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில் `சேலம் பெரியார் பல்கலைகழக வரலாற்று துறையை சார்ந்த உதவி பேராசிரியர் பிரேம்குமார், என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். மேலும் எனது சாதிப்பெயரை பயன்படுத்தி பேசி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்’ எனக் கூறிப்பிட்டிருந்தார். ஒரு சில நிர்பந்தத்தின் பேரில் அந்த மாணவி புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் மாணவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததற்கு முன்னதாகவே உதவி பேராசிரியர் பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் பலரும், மாணவர்கள் மீது அக்கறையுடன் செயல்படும் உதவி பேராசிரியர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுமென்றே பழிவாங்குகிறது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று சேலம் கோட்டாட்சியர், சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையர், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர். மேலும் பொறுப்பு பதிவாளரிடமும் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் புகார் அளித்த மாணவ மாணவிகள் ஒரு பேராசிரியரின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். அதுகுறித்த ஆடியோவொன்று வெளியாகி வருகின்றது.

மாணவ-மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தது குறித்து அவர்களிடம் மற்றொரு கல்லூரி பேராசிரியரொருவர் விளக்க கடிதம் கேட்டு விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் மாணவர்களை மிரட்டி விளக்கக் கடிதம் கேட்பது ஆடியோவாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆடியோ பிற மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள், பேராசிரியர்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து இதேபோல செயல்பட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தும் சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் அச்சுறுத்தலையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com