ஒரே இரவில் மூன்று இடங்களில் நடந்த கொலை முயற்சி: நெல்லையில் பரபரப்பு

ஒரே இரவில் மூன்று இடங்களில் நடந்த கொலை முயற்சி: நெல்லையில் பரபரப்பு
ஒரே இரவில் மூன்று இடங்களில் நடந்த கொலை முயற்சி: நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. பைக்குகள், கார், ஆட்டோ உடைக்கப்பட்டது. வைக்கோல் படப்புகளில் தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள வாய்க்காலில் பாலமுருகன் என்ற பாலமுகேஷ் (17) என்பவர் குளிக்கச் சென்றபோது, அப்பகுதிக்கு பைக்கில் வந்த மர்மநபர்கள் பாலமுகேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்த பாலமுகேஷை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள வீடுகள் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டதோடு அப்பகுதியில் இருந்த கார், ஆட்டோ, பைக், ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கால்நடை தீவனத்திற்காக வைத்திருந்த வைக்கோல் படப்புக்கும் தீ வைத்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த பாலமுகேஷ் உறவினர்கள் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வீடுகள் கார் பைக் உள்ளிட்டவைகளை சூறையாடிய சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒரு தரப்பினர் நெல்லை - அம்பாசமுத்திரம் சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இருவேறு இடங்களில் போராட்டமும், அரிவாள்வெட்டு சம்பவம் உள்ளிட்ட பிரச்னைகளும் நடந்த நிலையில் முன்னீர்பள்ளம் பகுதியில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ராஜராஜன், சுரேஷ்குமார் தலைமையில் அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் 2 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. முன்னீர்பள்ளம் பகுதியில் நடந்த இருவேறு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள கோபாலசமுத்திரத்தில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமிற்கு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் சிலர் அந்தபகுதியில் இருந்த பெருமாள் (70) மற்றும் சின்னத்துரை (25) ஆகிய இருவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். அரிவாள் வெட்டு சம்பவத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்கள், சுப்ரமணியபுரம் பகுதி அம்பாசமுத்திரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஒரே நாள் இரவில் மூன்று இடங்களில் நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவங்களால் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கே.நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com