தங்க புதையலை எடுக்க பேரனையே நரபலி கொடுக்க முயன்ற கொடூரம்... நெல்லையில் அதிர்ச்சி!!

தங்க புதையலை எடுக்க பேரனையே நரபலி கொடுக்க முயன்ற கொடூரம்... நெல்லையில் அதிர்ச்சி!!

தங்க புதையலை எடுக்க பேரனையே நரபலி கொடுக்க முயன்ற கொடூரம்... நெல்லையில் அதிர்ச்சி!!
Published on

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தில், வீட்டில் புதையல் இருப்பதாக கூறி மூதாட்டியை ஏமாற்றி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பறித்து பேரனையும் நரபலி கொடுக்க முயன்ற போலி சாமியார் கிரான ராஜன் கைது.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சடையமான்குளத்தைச் சேர்ந்தவர் பார்வதி (70). இவரிடம் டோனாவூரைச் சேர்ந்த சாமியார் கிரான ராஜன் (55) என்பவர், பார்வதி வீட்டில் பல கோடி மதிப்பிலான தங்க புதையல் இருப்பதாக கூறியுள்ளார். அந்த புதையலை சமய சடங்குகள் மற்றும் விஷேச பூஜைகள் செய்தால் புதையலை எடுத்துவிடலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

மேலும் தங்க புதையலை எடுப்பதற்கு 2 லட்சம் வரையில் பணத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தங்க புதையலை எடுப்பதற்கு கோழி மற்றும் கருப்பு பூனையை பலி கொடுக்க வேண்டும் என சாமியார் கிரான ராஜன் பார்வதியின் மகன் குமரேசனிடம் கூறியுள்ளார்.

சாமியாரின் ஆசை வார்த்தைக்கு மயங்கிய குமரேசன் கோழியையும் கருப்பு பூனை ஒன்றையும் பலி கொடுப்பதற்கு சாமியாரிடம் கொடுத்துள்ளார். அப்போது பூனை தப்பி ஓடிவிட்டது. உடனே சாமியார் கிரான ராஜன் குமரேசனிடம் இதற்கு பரிகாரமாக உனது மூத்த மகன் அல்லது இளைய மகனை அழைத்து வந்து நரபலி கொடுத்து பின்பு தங்க புதையலை எடுக்கலாம் என கூறியுள்ளார்.

குமரேசன் மது போதையில் இருந்ததால் நிலை தடுமாறி நின்றுள்ளார். அப்போது குமரேசனின் மனைவி எனது குழந்தையை நரபலி கொடுக்க சம்மதிக்கமாட்டேன் என கூறி அழுதுள்ளார். அப்போது சாமியார் கிரான ராஜன் குழந்தையை பிடித்து இழுத்துள்ளார். ஆனால் குமரேசனின் மனைவி குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார்.

சப்தம் கேட்டு ஓடிவந்த ஊர்பொதுமக்கள் சாமியார் கிரான ராஜனை பிடித்து வைத்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த களக்காடு போலீசார் குழந்தையை மீட்டு போலி சாமியார் கிரான ராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட மூதாட்டி பார்வதி மற்றும் குமரேசன் ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரானா ஊரடங்கு காலத்தில் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com