தயாரிப்பாளர் வருண் மணியனை கம்பியால் குத்திய இருவர் கைது
தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனை சென்னை நந்தனத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபோது கம்பியால் குத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வருண் மணியனுக்கும், அவரது அலுவலகத்தில் பணி புரிய வந்த எலக்ட்ரீஷியன்களான பாலகுரு, முத்துகுமார் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதின் முடிவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. வருண் மணியன் நந்தனம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரபல தொழிலதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனின் அலுவலகம் நந்தனத்தில் உள்ளது. இன்று அவர் அலுவலகத்திற்கு வந்தார். லிப்ட்டில் செல்லும்போது அங்கு வந்த எலக்ட்ரிஷியன்களான பாலகுரு, முத்துகுமார் ஆகியோருடன் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றி போனதால் 2 பேரும் இரும்பு கம்பியால் வருண் மணியனின் கை, கால்களில் குத்தினர். அவர் அலறியதும் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரையும் பிடித்தனர். ரத்த காயமடைந்த வருண் மணியனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுரு, முத்துகுமாரை கைது செய்தனர்.