ஏடிஎம்மில் சிறுகச் சிறுக செய்த திருட்டு: ஊழியர் கைது
ஏடிஎம்-ல் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து 16 லட்சம் ரூபாயைச் சேர்த்த ஊழியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் தனியார் ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் நிரப்பும் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நையினார்பாளையம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பாதுகாவலர் இல்லாததை அறிந்த பாபு, ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்பும்போது ஒவ்வொரு முறையும் 50,000 முதல் ஒரு லட்ச ரூபாய் வரை திருடிச்சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் ஆடிட் நடைபெறும் போது, திருடியது தெரியவரும் என பயந்த பாபு ஏ.டி.எம் இயந்திரத்தை தீ வைத்துவிட்டு, விபத்து ஏற்பட்டதை போல நம்பவைக்க முயற்சி செய்துள்ளார். எனவே காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம்மிற்கு பணம் நிரப்பும் பாபு மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஏ.டி.எம் இயந்திரத்தில் ஒவ்வொரு முறை பணம் நிரப்பும்போதும், திருட்டில் ஈடுபட்டதை பாபு ஒப்புக்கொண்டார். இதனையடுத்து காவல்துறையினர் பாபுவை கைது செய்து அவரிடமிருந்து பதினாறு லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

