ஆன்லைன் மோசடி மூலம் வங்கிக் கணக்கில் இருந்து 90,000 ரூபாய் பணம் திருடப்பட்டதையறிந்த மூதாட்டி மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னை அண்ணா நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி. வயதான இவருக்கு இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு இருந்திருக்கிறது. அதில், சிறுக சிறுக 90,000 ரூபாய் பணத்தை ஜெயலட்சுமி சேர்த்து வைத்திருக்கிறார். இதனிடையே தொலைபேசியில் ஜெயலட்சுமியை தொடர்புகொண்ட மர்ம நபர், வங்கியிலிருந்து அழைப்பதாகவும், ஏடிஎம் அட்டை காலாவதியாகிவிட்டதால் புதுஅட்டை வழங்க ஏடிஎம் அட்டையின் 16 இலக்க எண்ணையும் தெரிவிக்குமாறு ஜெயலட்சுமியிடம் கேட்டிருக்கிறார்.
அதனை உண்மை என்று நம்பிய ஜெயலட்சுமி அட்டையிலுள்ள எண்ணையும் அந்த மர்ம நபரிடம் கூறிவிட்டார். பின்னர் அவரது செல்போனுக்கு வந்த ஒடிபியையும் (ஒன் டைம் பாஸ்வேர்ட்) மர்ம நபர் கேட்டிருக்கிறார். அதையும் ஜெயலட்சுமி தெரிவித்த நிலையில், நாளை வங்கிக்குச் சென்று புது அட்டை பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர் ஜெயலட்சுமியிடம் கூறியிருக்கிறார்.
மறுநாள் வங்கிக்குச் சென்ற ஜெயலட்சுமி, விபரங்களைக் கூறி புதுஅட்டை கேட்டபோது, அதிகாரிகள் அவரது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதை தெரிவித்திருக்கின்றனர். பணத்தைப் பறிகொடுத்த தகவல் அறிந்தததும் ஜெயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்றும் பலனின்றி ஜெயலட்சுமி உயிரிழந்தார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.