9 மாத கைக்குழந்தையோடு காவல்நிலையத்தில் சரணடைந்த நபர்.. அசாமில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி!

அசாம் கோலாகாட் பகுதியை சேர்ந்த நஜிபுர் ரஹ்மான் என்பவர் தன் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரை கொலை செய்துவிட்டு தன் 9 மாத கைக்குழந்தையுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
assam triple murder
assam triple murderTWITTER

அசாமை சேர்ந்த ஒருவர், தன் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் என மூவரை கொலை செய்துவிட்டு, ஒன்பது மாத கைக்குழந்தையோடு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

அதன்படி காவல்துறையினர் “கொல்கத்தாவை சேர்ந்த மத்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரியாக பணியாற்றி வந்தவர் நஜிபுர் (25). இவர் கடந்த ஜூன் 2020-ல், முகநூல் மூலம் சங்கமித்திரா என்ற பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த முகநூல் நட்பு பின் காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 2020-ல் இருவரும் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி, கொல்கத்தாவில் திருமணம் செய்துள்ளனர். இருப்பினும் சங்கமித்திராவை அவரின் பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

A triple murder
A triple murderTwitter

பின் 2021-ல் சங்கமித்தராவின் பெற்றோரான சஞ்ஜீவ் மற்றும் ஜினு கோபால் ஆகியோர் காவல் நிலையத்தில் சங்கமித்திராவின் மீது திருட்டு வழக்கில் FIR பதிவுசெய்தனர். இதனால் கைது செய்யப்பட்ட சங்கமித்திரா, 37 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். பின் ஜாமீன் பெற்ற சங்கமித்திரா, மீண்டும் தன் பெற்றோர் வீட்டிற்கே சென்று அங்கேயே தங்கியுள்ளார்.

பிறகு ஜனவரி 2022-ல், தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய சங்கமித்திரா, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இம்முறை, சென்னையில் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். சென்னையில் 5 மாதங்கள் வசித்த இவர்கள், ஆகஸ்ட் மாதம் மீண்டும் அசாம் திரும்பியுள்ளார். அப்போது சங்கமித்திரா கர்ப்பமாக இருந்துள்ளார். நவம்பர் மாதத்தில் இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதன்பின் மார்ச் 2023-ல், தன் கணவர் தன்னை சித்திரவதை செய்வதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து தன் குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு (அசாமின் கோலாகாட் பகுதியில் உள்ளது) சென்றுள்ளார் சங்கமித்திரா. சங்கமித்திராவின் புகாரின்பேரில் கைதான நஜிபுர், கொலை வழக்கில் 28 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்.

28 நாட்களுக்குப்பின் ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளார் நஜிபுர். வெளியேவந்தவுடன் தன் குழந்தையை காண மனைவி சங்கமித்திராவின் வீட்டுக்கு சென்றுள்ளார் அவர். இருப்பினும் அவர்கள் நஜிபுரை குழந்தையை காணவிடவில்லை என சொல்லப்படுகிறது.

இதையடுத்து ஏப்ரல் 2023-ல் நஜிபுரின் சகோதரர், ‘சங்கமித்ரா கோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நஜிபுரை தாக்கினர்’ என குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இப்படியாக தொடர்ந்துகொண்டிருந்த இக்குடும்ப சண்டை, கடந்த திங்கள்கிழமை வெடித்துள்ளது. அதன் உச்சமாக நஜிபுர் தனது மனைவி மற்றும் அவரின் பெற்றோரை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்” என்றுள்ளனர்.

Nazibur and  Sanghamitra Ghosh
Nazibur and Sanghamitra GhoshTwitter

சங்கமித்திராவின் சகோதரியான கல்லூரி மாணவியொருவர் இச்சம்பவம் குறித்து IANS ஊடகத்துக்கு தெரிவித்தபோது “சம்பவம் நடந்தபோது நான் சங்கமித்திராவுடன் வீடியோ கால் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது நஜிபுர் எனது குடும்பத்தை கத்தியால் தாக்க முயன்றதை நான் கண்டேன். விரைந்து உடனடியாக அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுக்க முயற்சித்தேன். அதற்குள் அவர்கள் இறந்துவிட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதில் மேலும் அதிர்ச்சி தரும் சம்பவம் என்னவெனில், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரை கொலை செய்த நஜிபுர், தன் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு நேரடியாக காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அசாமில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “அசாமில், நஜிபுர் ரஹ்மானாக இருந்தாலும் சரி, வேறு எந்த நபராக இருந்தாலும் சரி, எங்கள் மாநிலத்தில் குற்றத்திற்கு இடமில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் உறுதிப்பாடு அசையாது. எந்த குற்றவாளியும் நீதியிலிருந்து தப்ப முடியாது” என்று பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட்டு, அசாம் முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கோலாகாட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புஷ்கின் ஜெயின் இது குறித்து கூறுகையில், ”குற்றம் சாட்டப்பட்டவர் சரணடைந்தார். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எங்கள் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

 - Jenetta Roseline S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com