ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து ஓராண்டு... இன்னும் விலகாத மர்மங்கள்! சிம்ம சொப்பணமா சம்போ செந்தில்?
ஓராண்டு முடிவடைந்த நிலையிலும் இன்னும் பல சந்தேகங்கள், அவிழாத மர்மங்கள், தலைமறைவு தாதாவை பிடிப்பதில் சிக்கல் என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பின்னணி நீண்டுகொண்டே செல்கிறது.
சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்(52).
வேணுகோபால்சாமி தெருவில் உள்ள அவரது பழைய வீட்டை இடித்து கட்டுமான பணி நடைப்பெற்று வந்தது. அதனை தினமும் பார்வையிட்டு வந்தார் ஆம்ஸ்ட்ராங். இந்த நிலையில் தான், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி வழக்கம் போல புதிதாக கட்டி வரும் வீட்டின் பணியை பார்வையிட சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது தமிழக அரசியல் மட்டுமின்றி டெல்லி அரசியல் வரை மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு புதிய சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பவத்தில் கொலையாளிகள், கொலையாளிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி செய்தவர்கள், இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் கொடுத்து உதவி செய்தவர்கள், பண பரிவர்த்தனை செய்தவர்கள், நாட்டு வெடிகுண்டு வாங்கியவர்கள், நாட்டு வெடிகுண்டு ஆந்திராவில் எடுத்து வருவதற்கு உதவி செய்தவர்கள் என வெவ்வேறு கோணங்களில் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, திருனின்றவூர் பா.ஜ.க நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி, தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, தி.மு.க திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசன் மகன் சதீஷ், வட சென்னை பா.ஜ.க மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை.
கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், அப்பு, நூர் விஜய் (எ) விஜயகுமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொது செயலாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன், அஸ்வத்தாமனின் தந்தை ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி, ராஜேஷ், கோபி, குமரன், புதூர் அப்பு என மொத்தம் 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுக்கு பிறகு அந்ததந்த கட்சி நிர்வாகத்தால் கட்சி பொறுப்புகளில் இருந்து அனைவரும் நீக்கப்பட்டனர்.
இதில் ஜூலை மாதம் 14 ஆம் தேதி அதிகாலை போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்ட திருவேங்கடம் என்பவர் புழல் பகுதி அருகே போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், த்அமிழ் மாநில காங்கிரஸ் என அரசியல் கட்சி நிர்வாகிகள் இருந்தது மேலும் அதிர்ச்சியையும் பற்பல சந்தேகங்களையும் தமிழக மக்கள் முன் ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் சம்மந்தப்பட்டிருப்பதால், நடந்த இந்த கொலை அரசியல் கொலையா? முன்பகை கொலையா? கட்டப்பஞ்சாயத்து தகராறு கொலையா? என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடந்த கொலையானது அரசியல் காரணுங்களுக்காக நடந்ததது அல்ல; கட்டப்பஞ்சாயத்து, நிலம் தொடர்பான பிரச்சனை, பழிக்குப் பழி, ஆற்காடு சுரேஷ் படுகொலை என ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பிரச்சனை இருந்ததும் இதனால் ரவுடிகள் பலர் ஒன்று சேர்ந்து கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர் என சென்னை காவல்துறை தெரிவித்தது. மேலும், இந்த கொலைக்கு முக்கிய காரணம் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி வடசென்னை தாதா நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் திட்டமிட்டு பல்வேறு காரணங்கள் இருந்த அனைத்து ரவுடிகளையும் ஒன்றிணைத்து கொலையை அரங்கேற்றியதாகவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 28 நபர்களில், என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடம், தண்டனைக் கைதி நாகேந்திரன் ஆகியோர் நீங்களாக 26 நபர்கள் மீது குண்டர் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னர், கொலைச் சம்பவம் நடந்த 90 நாட்களுக்குள் 5,200 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் 30 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 28 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவ்வழக்கில் A1 குற்றவாளியாக பிரபல தாதா நாகேந்திரன், A2 குற்றவாளியாக பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் தாதா சம்போ செந்தில், A3 குற்றவாளியாக தாதா நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.
பின்னர், இந்த வழக்கு விசாரணையானது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் A2 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபல தாதா சம்போ செந்திலை ஓராண்டு முடிந்தும் இன்னும் சென்னை காவல்துறையால் அவரை நெருங்க கூட முடியவில்லை என்பது காவல்துறையின் விசாரணை மீது தற்போதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாக சமூகவலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வரும் சம்போ செந்திலை, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் போலீசார் தீவிரமாக தேடினர். குறிப்பாக கர்நாடகா, பெங்களூர், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சம்போ செந்திலை தேடி வந்தனர். ஆனாலும், சம்போ செந்தில் பிடிக்க முடியவில்லை.
அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இன்டர்போல் உதவியுடன் ஓராண்டுகள் கடந்த நிலையிலும் தற்போது வரை தேடி வருகின்றனர். குறிப்பாக சம்போ செந்தில் அருகில் கூட தற்போது வரை காவல்துறையினரால் நெருங்க முடியவில்லை என்பதால் தற்போது வரை அவர் காவல்துறையினருக்கு சவால் விடும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார் எனவும் சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான், ஆர்ம்ஸ்டராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனால், பெரம்பூரில் கொலை நடத்த இடத்தில் நினைவஞ்சலி மற்றும் அன்னதானம் நடத்த அவரது மனைவி பொற்கொடி, காவல்துறையிடம் அனுமதி கேட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு நினைவஞ்சலி நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்ட திருவள்ளூர் பொத்தூர் பகுதியில் நினைவஞ்சலி நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தினத்துக்காக ஆம்ஸ்ட்ராங் தரப்பில் உள்ள ரவுடிகள் யாரேனும் பழிக்கு பழி சம்பவத்தில் ஈடுபடாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி நாகேந்திரன் கூட்டாளிகளான வெள்ளைப்பிரகாஷ், நாகேந்திரன் தங்கை கற்பகம் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்து ஓராண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்னமும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கான காரணங்கள் வெளிவரவில்லை என சமூக வலைதளவாசிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சென்னை சென்னை காவல்துறையால் ரவுடி சம்போ செந்திலை நெருங்க முடியாததால் சென்னை காவல் துறையின் விசாரணை மீதும் பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.