அரியலூர்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
அரியலூர் அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வணிகவியல் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (56). இவர் ஆண்டிமடம் அருகேயுள்ள அய்யூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர் ஜெயராமன் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகள் பேசுவது, பாலியல் ஆசையை தூண்டுவதுபோல் நடந்து கொள்வது, மாணவிகளை சீண்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் செய்துள்ளனர்.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை சிறையில் அடைத்தனர்.