பண மோசடி வழக்கில் அரியலூர் நகராட்சி சுயேட்சை வேட்பாளர் கைது
அரியலூரில் கம்பி வாங்கிவிட்டு பணத்தை தராமல் ஏமாற்றியதாக சுயேட்சை வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் சாக்கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மணிவேல். அதிமுகவை சேர்ந்தவர். இவருக்கு சீட் வழங்காததால் தற்போது 16வது வார்டு சுயேட்சை வேட்பாளராக களம் காண்கிறார்.
இந்நிலையில், செந்துறை ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் ஹார்டுவேர் கடையில் கடந்த ஆறு மாதங்களாக கம்பி வாங்கியுள்ளார். இதையடுத்து கம்பி வாங்கிய வகையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 563 ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அந்த தொகையை தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று மணிவேலிடம் பணத்தை கேட்கும்போது பணத்தை தர முடியாது என்று அசிங்கமாக திட்டியதோடு கல்லை எடுத்து பணம் கேட்டு வந்தால் மண்டையை உடைத்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஜாகிர் உசேன் அரியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரியலூர் போலீசார், மணிவேலை கைது செய்தனர்.