நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு இடைத்தரகரை கைதுசெய்த சிபிசிஐடி: முழு விவரம்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு இடைத்தரகரை கைதுசெய்த சிபிசிஐடி: முழு விவரம்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு இடைத்தரகரை கைதுசெய்த சிபிசிஐடி: முழு விவரம்

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மருத்துவக் கல்லூரி மாணவன் தனுஷ், அவருக்கு உறுதுணையாக இருந்த அவரின் தந்தை தேவேந்திரன் ஆகியோர் கடந்த ஆண்டுகளில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் பின்னணியையும், இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் நபர் குறித்தும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மாணவன் உதித் சூர்யாவின் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் விவரம்: கடந்த 2019 ல் 2019-20 ஆம் கல்வியாண்டில் தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் புகார் எழுந்தது. அதனடிப்படையில் தேனி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின் இவ்வழக்கானது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தேனி மருத்துவக் கல்லூரி மாணவன் உதித் சூர்யா அவனது தந்தை வெங்கடேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்களைப்போலவே ஆள்மாறாட்டம் செய்த மேலும் சில மாணவர்கள், அவர்களின் பெற்றோர், அவர்களுக்கு உதவிய 4 இடைத்தரகர்கள் என மொத்தம் 18 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மட்டுமன்றி கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர்களின் 11 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். ஆதார் ஆணையத்தின் மூலமாக முயன்றும் அவர்களின் விவரங்கள் பெறப்படவில்லை என்பதும் அவர்களில் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவன் தனுஷ் குமார் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் விவரம்: இந்த நிலையில் இதேபாணியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மற்றுமொரு புகார் காவல்துறைக்கு வந்தது. அதில், சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19 கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த தனுஷ் குமார் என்ற மாணவன் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் புகாரொன்று தெரிவிக்கப்பட்டது. இம்மாணவர் நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பு படித்து வருவதால், இவ்விவகாரம் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றது. இது தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். துனுஷ் குமாரை மீது சுமத்தப்பட்ட ‘நீட் தேர்வு ஆள்மாற்ற’ புகார், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா என்ற மாணவனின் வழக்கோடு ஒத்துப்போனதால், அதை கவனித்துக்கொண்டிருந்த சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் தனுஷ் குமார் பற்றிய புகாரை பூக்கடை போலீசார் தெரிவித்தனர்.

சி.பி.சி.ஐ.டி உடனடியாக இவ்வழக்கை தனி வழக்காக பதிவு செய்து சந்தேகத்திற்கு இடமான மாணவன் தனுஷ் குமார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தனுஷ் குமாரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து மருத்துவ மாணவன் தனுஷ் குமார் மற்றும் அவனது தந்தை தேவேந்திரன் ஆகியோரை ஒசூரில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர் சி.பி.சி.ஐ.டி போலீசார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றது.

சிக்கிய இடைத்தரகர்: தனுஷ் குமாரும், அவருக்கு உதவியாக இருந்த நபரும் கைது செய்யப்பட்டாலும்கூட கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இவ்வழக்கானது அடுத்தக்கட்ட விசாரணைக்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மருத்துவ மாணவன் தனுஷ் குமாருக்கு இடைத்தரகராக செயல்பட்ட இடைத்தரகர் ஸ்ரீஹர்ஷா என்பவரை பெங்களூரில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இடைத்தரகரான ஸ்ரீ ஹர்ஷா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பாக இவர் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீண்ட காலம் தரகராக செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவர் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் பிரமுகர் என்பதும் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சம் 20 லட்சம் முதல் அதிகபட்சம் 25 லட்ச ரூபாய் பணத்திற்கு சீட்டு வாங்கித் தந்ததும் தெரியவந்துள்ளது.

இடைத்தரகரை பிடித்தது எப்படி? இது போன்று மருத்துவச்சீட்டு வாங்கித் தருவதாக தரகராக செயல்பட்டு கர்நாடக மாநிலத்தில் மூன்று வழக்குகளில் இதற்கு முன்னரேவும் இவர் கைது செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவன் தனுஷ் மற்றும் அவரது தந்தை தேவேந்திரனிடம், ‘நல்லபடியாக ஆள்மாறாட்டம் செய்துதந்துவிடுவேன். அதுவரை என் மீது நம்பிக்கைக்கொள்ள இதை வைத்துக்கொள்ளுங்கள்’ எனக்கூறி ஓட்டுனர் உரிமத்தை கொடுத்துச் சென்றுள்ளார். தங்களின் வழக்கு விசாரணையின்போது மாணவர் தனுஷ் வீட்டில் சோதனை நடத்தியபோது அந்த ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர் சிபிசிஐடி அதிகாரிகள். அதை அடிப்படையாக வைத்து அவரை கைதும் செய்துள்ளனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை: இந்த விவகாரத்தில் ஸ்ரீஹர்ஷா தவிர, முக்கிய தரகராக பீகாரைச் சேர்ந்த ஒருவர் செயல்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் குறித்து முழு தகவல்களையும் திரட்டி உள்ள சிபிசிஐடி போலீசார் முக்கிய கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கைதான இடைத்தரகர் ஸ்ரீ ஹர்ஷாவை சி.பி.சி.ஐ.டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com