ஆந்திரா டூ இலங்கை: ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்த முயன்ற ஒருவர் கைது
இலங்கைக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு நாகை வழியாக கஞ்சா கடத்ததுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தஞ்சை - நாகை ஆகிய மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஆம்புலன்ஸில் 200 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த நாகையைச் சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக தெரிவித்தார். மேலும் ஆந்திராவில் இருந்து நாகை வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 1 கோடி என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.